நடிகை வனிதா ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கேற்றபின் பிசியாக இருக்கும் வனிதா காட்டில் மழை என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகளாக அறியப்பட்ட வனிதா, நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
அதன் பிறகு, வனிதாவிற்கு இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். திருமணத்தின் மூலம் வனிதாவிற்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அதிரடியான கேரக்டர் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர், சினிமா கிராஃபிக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால் இவர்களின் திருமணம் சர்ச்சையானது. இந்த திருமணமும் விரைவில் பிரிவில் முடிந்தது.
அதே நேரத்தில், வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் பிரபலத்தின் மூலம் சன் டிவியில் சந்திரலேகா சீரியலில் நடித்தார். அதன் பிறகு, விஜய் டிவி நிகழ்சிகளில் பங்கேற்றார். மகள்களுடன் தனியாக வசித்துவரும் வனிதாவிற்கு, டிவி சீரியல் வாய்ப்புகளும் சினிமா வாய்ப்புகளும் தேடி வந்துள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் வனிதா நடிக்க உள்ளார். நடிகை வனிதா சமீபத்தில் திருமதி ஹிட்லர் சீரியல் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை வனிதா ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளரும் கீர்த்தி சுரேஷ் பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தின் இயக்குனருமான ஆடம் தாசன் இயக்க உள்ளாராம்.
நடிகை வனிதாவுக்கு தொடர்ந்து, டிவி சீரியல் வாய்ப்புகள், டிவி நிகழ்ச்சி வாய்ப்புகள், சினிமா வாய்ப்புகள் வருவதால் வனிதா காட்டில் மழை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"