கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார் எலிசபெத் ஹெலன்.
ஹெலனின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த வனிதா, நான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக இருந்தவரை தான் திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,தனது புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹெலன் வழக்குத் தொடர்ந்தார். அதில், பீட்டர் பால், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.
மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், வரும் டிசம்பர் 23ஆம் தேதி வனிதா விஜயகுமார், பீட்டர்பால் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தது .மேலும், ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்களும், முகாந்திரமும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, பீட்டர் பாலை விட்டு பிரிவது தொடர்பாக வனிதா விஜயகுமார் வெளியிட்ட விடியோவில், "என் வாழ்நாளில் நான் ஏமாந்தது அன்பினால்தான். குடிப்போதையால பீட்டர் பால் ரொம்ப தப்பு பண்றாரு. ஏமாந்துட்டேன்… தோற்றுவிட்டேன்.. காதல், திருமணம் எனக்கு அமையவில்லை. எலிசபெத்துக்கும் நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் பார்த்த அனுபவித்த வலியை முழுவதுமாக நான் உணரவில்லை. ஆனால் 10 சதவிகிதம் என்னவென்று என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது" என்று தெரிவித்தார்.