ரஜினிகாந்த் அங்கிள் குணமாகி நலமுடன் இருந்தாலே போதும், அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தை நெட்டிசன்கள் வரவேற்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அவருடைய உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்ற விவாதங்கள் நடந்துவந்த சூழ்நிலையில், ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் டிசம்பவர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போல் இல்லேன்னா எப்பவுமே இல்லை என்று கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படத்தில் தனது பகுதி இன்னும் 40% நடிக்க வேண்டியுள்ளது. அதனை நடித்து முடித்து விடுகிறேன் என்று கூறினார்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளைக் கொண்டாடி முடித்த கையோடு, அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு தனி விமானத்தில் ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல் விதிமுறைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆனாலும், படக்குழுவினரில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் ரஜினி ரசிகர்கள் என பலரும் ரஜினி விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவருடைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ரஜினி உடல்நலம் பெற்று குணமடைய வேண்டும். அதே நேரத்தில் அவர் அரசியலுகு வந்து தனது உடல்நிலையைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, நடிகை வனிதா விஜயகுமார், ரஜினிகாந்த் அங்கிள் குணமாகி நலமுடன் இருந்தாலே போதும், அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வனிதாவின் இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “ரஜினிகாந்த் அங்கிள் ஆரோக்கியத்துடனும் உறுதியாகவும் இருக்க வேண்டும். ரஜினிகாந்த் அங்கிள் எல்லா வலிமையுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். 2020 என்ற மோசமான ஆண்டை கடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. எல்லாமே நல்லதாக இருக்கும். ரஜினிகாந்த் அங்கிள் நீங்கள் அரசியலுக்குள் நுழைந்து கஷ்டப்படுவதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் நீண்டகாலம் எங்களுடன் இருக்க வேண்டும். கடவுள் ஆசீர்வதிப்பார்.” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அரசியலுக்குள் வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்து கம்மெண்ட் செய்து ரீ ட்வீட் செய்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook