By: WebDesk
Updated: February 29, 2020, 11:02:44 AM
Varalaxmi Sarathkumar
Varalakshmi Sarathkumar : பட வாய்ப்புகளுக்காக நடிககளை தவறாக (காஸ்டிங் கவுச்) பயன்படுத்தும் கொடுமை ஹாலிவுட், பாலிவுட் என உலகளவில் அனைத்துத் திரைத்துறைகளிலும் இருக்கின்றன. ஓரிரு வருடங்கள் முன்பு ‘மீ டூ’ இயக்கம் தொடங்கப்பட்ட போது, முதல் முதலில் பாலிவுட் நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். அதன் பிறகு மற்ற நடிகைகளும், பெண்களும் தாங்கள் சந்தித்த அவலம் குறித்து பேசத் தொடங்கினர்.
இது ஒருபுறமிருக்க, தமிழ் சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகைகளில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை வரலட்சுமி. மீ டூ-வுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இவர், ‘சேவ் சக்தி’ எனும் பெண்களுக்கான அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களுக்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறி ‘பகீர்’ கிளப்பியுள்ளார்.
தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், தமிழ் சினிமாவில் தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார். படங்களில் தான் நடிக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர்களுடன் மற்றும் இயக்குநர்களிடமும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் அவலநிலை இருப்பதாகவும், சினிமா வாய்ப்பு போனாலும் பரவாயில்லை என்பதற்காக தான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார் வரலட்சுமி.
இது குறித்து பலர் பேசிய ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தற்காப்புக்காக பெண்கள் தங்களையே தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வரலட்சுமியின் இந்த குற்றச்சாட்டைக் கேட்ட திரையுலகினரும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் இது போன்ற வாரிசு நடிகைகளுக்கே பாதுகாப்பு இல்லையெனில், எந்த பின்புலமும் இல்லாமல், கனவுகளோடு மட்டும் சினிமா கதவை தட்டும் இளம் நடிகைகளை நினைத்தால் மனது கனக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”