நடிகர் விஜய் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்துள்ள மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள குடும்பப் படமான வாரிசு திரைப்படம் முதல் நாள் வசூலில் அஜித்தின் துணிவு படத்தை தாண்டி வென்றுள்ளது. விஜயின் வாரிசு படத்தின் முதல் நாள் கலெக்ஷனைக் கேட்டு ஒரே நாளில் இத்தனை கோடியை குவித்துள்ளதா என்று வியக்க வைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் விஜய், அஜித்தின் படங்கள் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் நடித்த வாரிசு படத்தை விஜய் ரசிகர்களும் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தை அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். திரையரங்குகளில் கட்அவுட்களாலும் பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் யாருடைய படம் வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், முதல் நாள் கலெக்ஷனில், விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் வசூல், அஜித்தின் துணிவு படத்தைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாள் வசூலில் ரூ.26.5 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், விஜய்யின் வாரிசு திரைப்படம் அஜித்தின் துணிவு படத்தைவிட அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது.
திரைத்துறை தகவல்களை ஆய்வு செய்யும் சாக்னில்க் கருத்துப்படும், தமிழ்நாட்டில் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியும், கர்நாடகாவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.3.5 கோடியும், மற்ற பகுதிகளில் இருந்து ரூ.1 கோடியும் வசூலித்துள்ளது. வாரிசு படம் வெளியான முதல் நாளில், படம் சுமார் 67% இறுக்கைகளை ஆக்கிரமித்திருந்தது. காலை காட்சிகள் 55.6% இறுக்கைகளும் பிற்பகல் காட்சிகள் 68.6% இறுக்கைகளும் மாலையில், 72.4% இறுக்கைகளும் இரவுக் காட்சிகள் 71.2% இறுக்கைகளும் நிரம்பியிருந்தன. வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 7 கோடிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையில் வாரிசு திரைப்படம் வெளியான திரையரங்குகளில் 98% இருக்கைகளும், புதுச்சேரியில் 100% இருக்கைகளும் நிரம்பியிருந்தன. தேசிய தலைநகர் டெல்லியில் 16% இறுக்கைகளை மட்டுமே நிரம்பியிருந்தன. இதற்கு முன்னர், விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தாலும், விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதனால், விஜய்யின் வாரிசு படம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆஸ்திரேலியாவில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்பம் ரூ. 80 லட்சட்தையும் அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ 33 லட்சத்தையும் முதல் நாளில் வசூல் செய்துள்ளது. ஆனால், அஜித்தின் துணிவு திரைப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரிசு திரைப்படத்தைவிட அதிகமாக வசூலித்துள்ளது. துணிவு திரைப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரூ. 1.6 கோடியும், அமெரிக்காவில் ரூ. 2.2 கோடியும் வசூலித்துள்ளது. அதே போல, வாரிசு திரைப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரூ. 1.4 கோடியும் அமெரிக்காவில் 1.2 கோடியும் வசூலித்து வெளிநாடுகளில் துணிவை விட வாரிசு பின் தங்கியுள்ளது.
சமீப ஆண்டுகளாக, இந்தியா முழுவதும் தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கம் ஆர்.ஆர்.ஆர். மற்றும் காந்தாரா போன்ற திரைப்படங்களின் வெற்றிகளால் உணரப்படுகிறது. ஆனால், இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். பான்-இந்தியா படங்கள் வெற்றி பெறுவது கடினம். வாரிசு படம் வடக்கில் வெற்றி என்பது வெறும் வாய் வார்த்தையாகத்தான் இருகும் எனத் தெரிகிறது. வாரிசு படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கிருபாகர் புருஷோத்தமன் வாரிசு திரைப்படத்திற்கு 5 ஸ்டார்களில் 3 ஸ்டார்களைக் கொடுத்து விமர்சனம் செய்துள்ளார். அதில் “இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, விஜய் மாஸ் காட்சிகள், நான்கு சண்டைக் காட்சிள், குத்துப் பாடல்கள், ‘மசாலா’, ‘அம்மா-மகன் சென்டிமென்ட்’ என்ற ஃபார்முலாக்களைக் கொண்டு வாரிசு படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்” என்று குறிப்பிட்டுளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”