4 வில்லன்களுடன் மோதும் விஜய்?
பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அர்ஜூன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் கவுதம்மேனன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட 4 பேரும் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜூன் ஏற்கனவே கடல் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திலும், கவுதம் மேனன் ருத்ரதாண்டவம் படத்திலும் மிஷ்கின் சவரக்கத்தி படத்திலும் வில்லன்களாக நடித்துள்ளனர்.
காட்சிகளை காப்பியடித்ததா காந்தாரா படக்குழு?
கன்னடத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுளள படம் காந்தாரா. 16 கோடி செலவில் தயாரான இந்த படம் தற்போதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ள கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த படத்திற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், படத்தில் இந்து கடவுள் குறித்து தவறாக காண்பிக்கப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே காந்தாரா படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் கேரளாவில் உள்ள தைக்குடம் என்ற இசைக்குழுவினரின் இசை ஆல்பத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தோனி படத்தின் நாயகனாக ஹரிஷ் கல்யாண்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாக சினிமா தயாரிக்கும் ஆர்வத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் முதல் படமாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு தோனி மனைவி சாக்ஷி எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது இந்த படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில், இந்த படத்தை தமிழ்மணி என்பவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வாரிசு மகேஷ்பாபு படத்தின் ரீமேக்கா?
பீஸ்ட் படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ, ஜெயசுதா, சரத்குமார் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான புகைப்படங்களை வைத்து வாரிசு படம் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான மகரிஷி படத்தின் ரீமேக்கா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வாரிசு பத்திற்கு முன்பு வம்சி இயக்கிய படம் மகரிஷி என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காமெடி நடிகரான இருந்து நாயகனாக உயர்ந்த சந்தானம் தற்போது நடித்து வரும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். தெலுங்கில் வெளியான ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்த நிலையில், ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் வரும் நவம்பர் 25ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil