புது படங்கள் இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியிடப்படுவது சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது. அப்படி திருட்டுத் தனமாக படத்தை வெளியிடும் இணையங்களில் ‘டிரெண்டிங்கில்’ இருப்பது தமிழ் ராக்கர்ஸ் தளம்.
பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள், திரையில் வெளியான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் தளத்திற்கு விஜயம் செய்து விடும் (அவ்ளோ ஸ்பீடு). இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்துக்கும் நடிகர் விஷாலுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சர்ச்சை வெடித்தன.
இதற்கிடையில் பொதுநலன் கருதி என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் கலந்துக் கொண்ட இயக்குநர் வசந்தபாலன், “சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், சரியான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக பரியேறும் பெருமாள் படத்தை பா.ரஞ்சித் எனும் பெரிய இயக்குநர் தயாரித்திருந்த போதிலும், அதற்கு சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் பேரன்பு, சர்வம் தாள மயம் படத்தைப் பார்க்க காலையில் திரையரங்குக்குச் சென்றால், அங்கு அந்தப் படங்கள் திரையிடப்படாமல் இருக்கின்றன. இதனால் தரமான சிறிய பட்ஜெட் படங்கள் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேரன்பு மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்கள் அதற்குள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டன. தயாரிப்பாளர் சங்கத் தலைவர், இதுபோன்ற விஷயங்களை ஒழிக்கிறோம் என்றுக் கூறித்தானே பதவிக்கு வந்தார். தமிழ் ராக்கர்ஸை கண்டுப்பிடிக்க முடியாதா?
நாளை என்னுடைய படமும் இப்படி இணையத்தில் வெளியானால், நான் எங்கே செல்வது, யாரிடம் முறையிடுவது? இயக்குநர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தானே எங்களை காப்பாற்ற வேண்டும். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் மட்டும் ஏன் வெளியிடப்படுவதில்லை. கே.ஜி.எஃப் என்ற படம் இன்னும் ஏன் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகவில்லை? படம் பார்க்க மாலுக்குச் சென்றால் 1 மணி நேர பைக் பார்க்கிங்குக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் ஒழிப்பதாகக் கூறி தானே பதவிக்கு வந்தீர்கள்” என கோபத்துடன் பேசினார்.
இதில் கே.ஜி.எஃப் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை விஷால் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.