கேப்டன் மில்லர் படத்தின் கதை தான் எழுதிய நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். பொங்கல் விருந்தாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
இந்த நிலையில், புகழ்பெற்ற எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடையது என்றும், தான் எழுதிய பட்டத்து யானை என்கிற நாவலின் கதையை திருடி தான் எடுத்திருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். வேல ராமமூர்த்தி குற்ற பரம்பரை, குருதி ஆட்டம், அரியநாச்சி உள்ளிட்ட பல நாவல்களுக்காக புகழ்பெற்றவர். மேலும், பட்டத்து யானை, சேதுபதி, கிடாரி உள்ளிட்ட படங்களிலும், தற்போது நடித்து வரும் எதிர் நீச்சல் சீரியல் மூலமும் பிரபலமானவர். இவர் எழுதிய 'பட்டத்து யானை' என்ற நாவல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக வெளியானது. இந்த பட்டத்து யானை நாவலின் கதையை திருடி கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாக டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வேடியப்பன் முனுசாமி முகநூலில் தெரிவித்துள்ளார்.
வேடியப்பன் முனுசாமி தனது பதிவில், ”சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்புப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாகப் பேச முடிகிறது. பார்க்க முடிகிறது. புதிய நூல்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும். அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் அப்படியே காப்பி அடைத்து பணம் சம்பாதிக்க என்று புரிந்துகொள்வது ஆபத்தானது.
சமீபத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்யமானது அல்ல. ஒரு படைப்பாளனின் படைப்பைத் திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?.
கேப்டன் மில்லர் திரைப்படம், டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது பட்டத்துயானை நாவலின் அப்பட்டமான திருட்டு என்று எழுத்தாளர் Vela Ramamoorthy குற்றம் சாட்டி உள்ளார். படைப்பாளர்கள் குரல்கொடுக்க வேண்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்புப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று...
Posted by Vediyappan M Munusamy on Friday, January 19, 2024
இதுதொடர்பாக பேசிய வேல ராமமூர்த்தி, கேப்டன் மில்லர் எனது பட்டத்து யானை நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் எழுதிய அந்த நாவலில், ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிவிட்டு, அதிலிருந்து விலகி எப்படி தன் நாட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார் என்பது தான் கதைச்சுருக்கம். அதனை தங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கேப்டன் மில்லர் என்கிற பெயரில் படத்தை எடுத்துள்ளனர்.
பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை, அதற்கான அனுமதியும் வாங்காமல் படத்தை எடுத்திருப்பது கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா. எனது ஊர் மக்களின் வாழ்வியலை நான் எழுதுகிறேன், அதை கூச்சமே இல்லாம திருடிவிடுகின்றனர். கேப்டன் மில்லர் மட்டுமில்ல இன்னும் சில படங்களில் என்னுடைய கதைகளில் வரும் சீன்களை திருடி எடுத்துள்ளனர்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட என்னுடைய நாவலில் இருந்து சில காட்சிகளை திருடி ராஜமவுலி எடுத்துள்ளதாக எனது வாசகர்கள் மூலம் கேள்விப்பட்டேன். ஆனால், அவர்களிடம் சென்று ஆதாரத்துடன் கேள்வி கேட்டால் நம்மையே அசரவைக்கும் அளவுக்கு பதில் வரும். அப்படியே புகார் தந்தாலும் வலுத்தவர்கள் பக்கம் தான் நியாயம் பேசுவாங்க. தமிழ் சினிமாவில் இப்படி அடிக்கடி நடப்பது எனக்கு அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது மிகவும் வேதனையளிக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.