லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி பட டிரெய்லரை பற்றி விமர்சனம் செய்த வீடியோவை பகிர்ந்தது, சர்ச்சையான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் ’தி கோட்’ (The GOAT) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்க உள்ளது.
இந்த நிலையில் நேற்று வெங்கட் பிரபுவின் கேங்கில் அறிமுகமான நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விமர்சனத்தை முன்வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான மாஸ் நடிகர்களின் திரைப்படங்களின் டிரெய்லர்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஒரே மாதிரியான காட்சிகள், வசனங்கள், இசை என எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றது, அவன் வரப் போறான், வந்துட்டான், செய்யப் போறான் என கிட்டதட்ட எல்லா மாஸ் நடிகர்களின் படங்களின் டிரெய்லரும் ஒரு மாதிரியாக இருக்கிறது. மக்கள் வித்தியாசமாக எதிர்ப்பார்க்கின்றனர், என தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இந்தநிலையில், கார்த்திக் குமார் பேசிய வீடியோவின்படி சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தின் டிரெய்லரைத்தான் குறிப்பிடுகிறார் என பலர் விமர்சனம் செய்தனர். மேலும், வெங்கட் பிரபு இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக பலர் இணையதளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்த விவகாரம் இணையத்தில் சர்ச்சையாக தீயாய் பரவிய நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “அந்த வீடியோவில் அனைத்து கமர்ஷியல் படங்களின் டிரெய்லர்களையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர் கூறுவது உண்மையும் கூட. வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் இருந்து வித்தியாசமாக டிரெய்லரை கொடுக்க முயற்சித்தால் ரசிகர்கள் நிச்சயமாக ஏற்க தயாராக உள்ளனர்” என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“