மகேந்திரன் மறைவு: தமிழ் சினிமாவில் காலத்தால் மறக்க முடியாத இயக்குநர்களில் மிக முக்கியமானவர் மகேந்திரன்.
தன்னுடைய ஒவ்வொரு வித்தியாச படைப்புகளின் மூலமும், வெகுஜன ரசிகர்களை சம்பாதித்தவர். 1966-ல் ’நாம் மூவர்’ எனும் படத்துக்கு கதை எழுதுவதில் ஆரம்பித்த இவரது திரைப் பயணம், இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ வரை தொடர்ந்தது.
உலகளாவிய ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழுத்தமுள்ள படைப்புகளைக் கொடுத்தவர்.
சிறுநீரக கோளாறால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அவருக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
”இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. நீங்களும், உங்களது படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்” என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
”அவரின் படங்களை விட அவர் குறைவாகத்தான் பேசுவார்
எனக்கு அவருடைய படங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்
உதிரிப்பூக்கள் படத்தைப் பார்த்துவிட்டு, உறக்கம் இல்லாமல் துடித்த இரவுகளை எப்படி மறப்பேன்
அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
”மகேந்திரன் சாரின் மறைவு வருத்தமளிக்கிறது. இளைப்பாருங்கள்” என இயக்குநர் அகமது தெரிவித்துள்ளார்.
”பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனின் இழப்பு என்னை நிம்மதி இழக்கச் செய்திருக்கிறது. நம்முடைய காலத்தில் வாழ்ந்த சிறந்த இயக்குநர்” என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டியுள்ளார்.
நடிகை ராதிகா, “இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ‘மெட்டி’ திரைப்படத்தில் தான் நடித்தது, தனக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்” என்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மகேந்திரனின் படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இசையமைப்பாளர் இளையராஜா, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
”மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது” என கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கதறி அழுதார்.
நடிகர்கள் மோகன், சின்னி ஜெயந்த், நடிகைகள் அர்ச்சனா, ரேவதி, சுஹாசினி, இயக்குநர் மணிரத்னம் ஆகியோரும் மகேந்திரனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், மகேந்திரனின் மூன்று படங்களில் நடித்தவருமான நடிகர் ரஜினிகாந்த், மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமா உள்ளவரை அவரது புகழ் நிலைத்திருக்கும், என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
இவரு மாதிரி சினிமாவில் ஜெயிக்கணும் என பலருக்கு உந்துதலாய் இருந்தவர் இயக்குநர் மகேந்திரன் என இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.