scorecardresearch

பெரு வெள்ளம் நேரத்தில் படகு எடுத்துக்கொண்டு சென்னை மக்களுக்கு உதவி செய்தவர்: மயில்சாமி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

பெரு வெள்ளம் நேரத்தில் படகு எடுத்துக்கொண்டு சென்னை மக்களுக்கு உதவி செய்தவர்: மயில்சாமி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்று (பிப்ரவரி 19) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 57. சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது மறைவு பல தரப்பட்டவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்

அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தியில், “நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மனோபாலா இது மிகவும் “கொடுமை” என ட்விட்டர் பதிவிட்டுள்ளார். “மழை, புயல் வந்தபோதெல்லாம் படகு எடுத்துக்கொண்டு சென்னை மக்களுக்கு உதவி செய்தவர். பணம் செலவாகிறது என்று கேட்டால், என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு போக போகிறோம் என்று சொல்வார். திரைத்துறை தொடர்ந்து இறப்புகளை சந்தித்து வருகிறது. இது வேதனையாக உள்ளது” என்று உருக்கமாக தெரிவித்தார்.

மிகப்பெரிய இழப்பு – யோகி பாபு பேட்டி

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். “சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் இருந்து மயில்சாமி அண்ணனை எனக்கு தெரியும். அவரது இறப்பு அதிர்ச்சியாக உள்ளது. அவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய இழப்பு” என்று கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965-ம் ஆண்டு பிறந்தவர். திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். 1984-ம் ஆண்டு தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

விருகம்பாக்கம் மக்கள் மனங்களை வென்றவர்

ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களில் நடித்தவர். இன்றைய கால நட்சத்திரங்கள் ஆன அஜித், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்டவர்களுடனும் நடித்துள்ளார். குறிப்பாக விக்ரமின் தூள் படத்தில் நடித்த காமெடி சூப்பர் ஹிட் ஆனது. அதில் விவேக்குடன் இணைந்து இவர் நடித்த காமெடி இன்று வரை பலரையும் சிரிக்க வைக்கிறது. ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தில் மனோ பாலாவுடன் சேர்ந்து காமெடி காட்சியில் நடித்திருப்பார்.

மயில்சாமி கடைசியாக நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம், லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மயில்சாமி சமூக சேவையிலும் நாட்டம் கொண்டவர். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், மக்கள் மனங்களை வென்றவர். சென்னை மழை, வெள்ளத்தின் போது அத்தொகுதி மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். களத்தில் இறங்கி பணியாற்றியுள்ளார். இவரின் இறப்பு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Veteran tamil comic actor mayilsamy passes away at 57

Best of Express