/indian-express-tamil/media/media_files/2025/09/01/vetrimaaran-director-to-stop-produce-films-bad-girl-grass-root-film-company-tamil-news-2025-09-01-16-00-42.jpg)
பேட் கேர்ள் 'BAD GIRL' படத்துடன் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூட இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். 2007 தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தடம் பதித்த அவர், தனுஷுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் விடுதலை பாகம் 1, விடுதலை பாகம் 2 போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகம் வெற்றிப்படங்களாக அமைந்தது.
இயக்குநர் பாலு மகேந்திராவின் பள்ளியில் இருந்து வந்த அவர் ஏராளமான விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். குறிப்பாக ஆடுகளம், விசாரணை, அசுரன் திரைப்படங்களுக்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதேபோல், அப்படங்களில் பணியாற்றிய தனுஷ், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோருக்கு விருது கிடைத்தது.
வெற்றிமாறன் இயக்குநராக மட்டுமல்லாது, ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். அவரின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி உதயம் என்.எச் 4, காக்கா முட்டை, கொடி, அண்ணனுக்கு ஜெய், லென்ஸ், மிக மிக அவசரம், சங்கத்தலைவன், அனல் மேல் பனித்துளி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. இதில் காக்கா முட்டை படம் தேசிய விருது வென்று அசத்தியது.
இந்நிலையில், சூர்யா, சிம்பு ஆகியோரை வைத்து அடுத்தடுத்து 2 படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன், கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத்தை வைத்து பேட் கேர்ள் 'BAD GIRL' எனும் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்துடன் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூட இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
பேட் கேர்ள் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், "பேட் கேர்ள் திரைப்படத்துடன் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடிவிடுவேன். திரைப்படத்தின் வணிகம் பாதிக்கப்படுவது, தயாரிப்பாளருக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. ஒரு இயக்குநராக இருப்பது சுதந்திரமாக இருக்கும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைத் தரும்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.