Vetrimaaran's next with RS Infotainment: சினிமாவில் கலையையும் வணிகத்தையும் பேலன்ஸ் செய்யும் மிகச்சில இயக்குநர்களுள் வெற்றிமாறன் குறிப்பிடத் தகுந்தவர். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் அவர் இயக்கிய ‘அசுரன்’ படத்தைச் சொல்லலாம். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் படம், இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகியுள்ளது. இதன் மூலம் அவர் அடுத்து இயக்கப் போகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Advertisment
வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரனை', 'வட சென்னை' மற்றும் 'அசுரன்' ஆகிய 5 படங்களும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்டின் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறனின் அடுத்தப் படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூரியை கதாநாயகனாக வைத்து தான் ஒரு படம் இயக்கவிருப்பதாக, நிறைய நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார் வெற்றி. ஆகையால், அது இந்தப் படமாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தவிர, இந்தப் படம் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதைத் தொகுப்பை அடிப்படையாக வைத்து இயக்கப்படுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, 'விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘யாமிருக்க பயமே’ உள்ளிட்ட படங்களை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் - எல்ரெட் குமாரின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!