வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். 'அசுரன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ரஜினி, ஷாரூக் கான், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வெற்றிமாறன் சந்தித்துப் பேசினார். இறுதியில் விஜய், வெற்றிமாறனுடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தாணுவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் சூர்யா. 'அசுரன்' என்ற பெரிய ஹிட் கொடுத்திருப்பதால், சூர்யா - வெற்றிமாறன் இருவருக்குமே அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துக் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பை தாணு தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, "அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் 'சூர்யா 40' படத்தைத் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் தாணு.
'அசுரன்' படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் வெற்றிமாறன். அந்த படத்தை முடித்துவிட்டு சூர்யா படத்தை இயக்குவார் என தெரிகிறது.