/indian-express-tamil/media/media_files/2025/09/29/vettaiyan-2025-09-29-13-33-54.jpg)
எவ்ளோ உயரம் போனாலும் இதுல அவர் க்ளாஸ் தான்; ரஜினிகாந்த் பற்றி வேட்டையன் நடிகை புகழாரம்!
தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருபவர் ரித்திகா சிங். கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ’இறுதிச் சுற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
நிஜ வாழ்வில் குத்துச்சண்டை வீராங்கனையாக இருக்கும் ரித்திகா சிங்கிற்கு இந்த படத்தின் கதாபாத்திரம் பெரும் பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து, நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக தோன்றிய ரித்திகா சிங்கின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து கடந்த 2024-ஆம் ஆண்டு டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் போலீஸாக வந்து அசத்தியிருந்தார்.
இப்படி தன் திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரித்திகா சிங். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அசரவைத்து வருகிறார்.
இந்நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினி உடன் நடித்தது குறித்து நடிகை ரித்திகா சிங் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, '' திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும்.
அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்'' என்றார். ரித்திகா சிங்கின் இந்த கருத்திற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த், ரித்திகா சிங் சொன்னது போன்று சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கூட மற்றவர்கள் மீது தொடர்ந்து அன்பு காட்டி வருகிறார். முன்னணி நடிகர் என்ற பெருமை துளியும் இல்லாமல் அவர் நடந்து கொள்வது உண்மையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.