பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது விடுதலை - 2 ட்ரைலர்
பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடுதலை - 2 திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விடுதலை -2. இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் பாகத்தின் மூலம் காமெடி பாத்திரங்களில் நடித்து வந்த சூரி, கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இப்படத்தின் முதல் பாகம் நிறைவடைந்த இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரது பாத்திரப் படைப்பின் முன் கதை இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரேசன் என்ற போலீஸ் பாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த ட்ரைலரை பார்க்கும் போது, சாதாரண தொழிலாளியாக இருந்த பெருமாள் கதாபாத்திரம் எவ்வாறு பெருமாள் வாத்தியாராக மாறியது என்பது குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனைகள் மற்றும் போலீசாரின் வன்முறை குறித்த காட்சிகளும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளன.
ட்ரைலரில் மஞ்சு வாரியர் சமூக செயற்பாட்டாளர் போன்ற பாத்திரத்தில் நடித்திருப்பதை போன்று தெரிகிறது. குறிப்பாக, விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் இடையேயான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“