Vidya Balan: பாலிவுட்டின் சிறந்த கதாநாயகிகளில் நடிகை வித்யா பாலனுக்கு ஓர் முக்கிய இடமுண்டு. ’கஹானி, தும்ஹாரி சுலு’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றவர். அதோடு நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றவர்.
Advertisment
இந்நிலையில் வித்யா பாலன் தனது அடுத்த படமான 'சகுந்தலா தேவி'யின் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார். இது கணிதவியலாளர் சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. இந்தப் படத்தை கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்குகிறார். சோனி பிக்சர்ஸ் மற்றும் அபுண்டான்டியா என்டர்டெயின்மென்ட் இதனை தயாரிக்கிறது.
தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. சிவப்பு சேலையில் முதலிடத்தில் வித்யா பாலனும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை முறையே, கணினி மற்றும் கால்குலேட்டரும் அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றுள்ளன. இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வித்யா பாலன், "உற்சாகம் ஒவ்வொரு நாளும் பெருகும்! கணித மேதைகளின் 'வேரை' தோண்டி எடுக்கும் நேரம் இது. #ShakuntalaDevi. #FilmingBegins” எனப் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த சகுந்தலா தேவி, குடும்ப சூழல் காரணமாக முறையான படிப்பைப் பெறாதவர். வேகமாக மனக் கணக்குகளை போட்டுக் கொள்ள தெரிந்துக் கொண்டவர். ஏதாவது ஒரு நூற்றாண்டின் தேதியைச் சொன்னால், அதன் கிழமையை டக்கென்று சொல்லிவிடும் ஆற்றல் கொண்டவர். இதற்காக ‘கின்னஸ்’ புத்தகத்திலும் இடம் பெற்ற சகுந்தலா, உலகின் வேகமான ‘மனித கணினி’ என்ற பெயருக்கும் சொந்தக்காரர்!