தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது 'எல்.ஐ.கே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலைக்கு பேசியதாக தகவல் வெளியானது.
புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உடன் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையானது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று இதற்கு விளக்கம் அளித்து சமூக வலைதளப் பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில் தான் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பிற்காக புதுச்சேரி அரசிடம் அனுமதி கேட்க சென்றிருந்தாகவும், தம்முடன் வந்த உள்ளூர் மேலாளர் உணவகம் தொடர்பாக அமைச்சருடன் பேசியுள்ளார். இது தவறுதலாக என்னுடன் இணைத்து பேசப்படுகிறது என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணனும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், "இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை சந்தித்து புதுச்சேரியில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதியும், கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக இடங்கள் பற்றியும் கேட்டார்.
அப்பொழுது அவருடன் வந்த உள்ளூர் சினிமாத்துறை நபர் புதுச்சேரி சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்க போகிறீர்களா? அப்படி விற்றால் என்ன விலை போகும்? என்று கேட்டார். அதற்கு அரசாங்கத்தின் இடத்தை யாருக்கும் விற்க அனுமதி இல்லை. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு சொத்துகளும் குடியரசு தலைவரின் பெயரில் உள்ளது என்று விளக்கம் அளித்தேன்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“