இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகர் தனுஷின் பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டு வாழு, வாழ விடு எனக் குறிப்பிட்டுள்ளது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடிகை நயன்தாரா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், தனுஷிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) பெறுவதற்கான தங்கள் எல்லாப் போராட்டங்களும் தோல்வியடைந்தன எனக் குறிப்பிட்டிருந்தார். 2 ஆண்டுகளாக காத்திருந்தும் எந்தவித பலனும் அளிக்காத நிலையிலேயே, மீண்டும் படப்பிடிப்பை நடத்தி, மறு தொகுப்பு செய்து தற்போது வெளியாகவுள்ள ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனவும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இச்செயல் கீழ்த்தரமானது என நடிகை நயன்தாரா கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இப்பதிவு கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனூஷ் பேசும் பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். "வாழு, வாழ விடு - இவையெல்லாம் நம்பும் தீவிர ரசிகர்களுக்காக... மனிதர்கள் மற்றவர்களுக்காக மாற்றமடைவதற்கும், மற்றவர்களின் சந்தோஷத்தில் இருந்து மகிழ்ச்சியை பெறுவதற்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“