Vijay Ajith Twitter Trending Clash: டிவிட்டரில் யாருடைய ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்வது என்பதில் எப்போதும் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு போட்டியும், மோதலும் ஏற்படும்.
வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள். இதனை பெரிதாகக் கொண்டாட இருக்கிறார்கள் ரசிகர்கள். சென்னையில் பல திரையரங்குகளில் இதற்காக விஜய்யின் பல ஹிட் படங்களும் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக சென்னை சத்யம் திரையரங்கில் ‘தெறி’ படம் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அதில் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக்கும், 22-ம் தேதி நள்ளிரவு செகண்ட் லுக்கும் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்தார்கள் விஜய் ரசிகர்கள்.
பின்னர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் பிறந்தநாளுக்கான காமன் டிபி-யை வெளியிட்டார். ’தரணி ஆளவா தளபதி’ என்ற வாசகத்துடன் இருந்த அந்த போஸ்டரை கிளிண்டன் ரோச் என்பவர் வடிவமைத்திருந்தார். இதனைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் டிசைனருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து #ThalapathyBDayCDP #ThalapathyBDayCelebrations #ThalapathyBdayMode போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகின. இதனால் கோபமான அஜித் ரசிகர்கள், விஜய்க்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ் டேக்குக்கு பலரும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டனர்.
குறிப்பாக, அஜித்தின் நேர் கொண்ட பார்வை டீசரில் இடம்பெறும், ’ஒருத்தர் மேல விசுவாசம் காட்ட, ஏன் இன்னொருத்தர அசிங்கப் படுத்துறீங்க’ எனக் குறிப்பிட்டு விஜய்க்கு எதிரான அந்த டிரெண்டை பலரும் சுட்டிக் காட்டினார்கள்.
ஒருபுறம் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகையில், இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் தேவையா என பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்பினர். சில காலம் ஹேஷ்டேக் டிரெண்டிலிருந்து விலகியிருந்த விஜய் - அஜித் ரசிகர்கள், நேற்றிலிருந்து இதனை மீண்டும் கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.