ஆஷாமீரா ஐயப்பன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
இப்போதெல்லாம் எல்லா மொழி திரைப்படங்களையும் ரசிக்க நம்மால் முடிகிறது. ‘கலைக்கு மொழியில்லை’ என்பது உண்மைதான். ஆனால், நமக்கு தெரிந்த மொழியில் அதனை காணும்போது, கதாபாத்திரங்களுடன் அதிகமாக ஒன்றிக்கொள்ள முடியும். அப்படி, வேற்று மொழி திரைப்படங்களை காண்பதற்கு பேருதவி புரிவது ‘சப்டைட்டில்’. இந்த வார்த்தை கடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துகிறது. எல்லா துறைகளைபோலவும், சினிமாவின் எல்லா இடுக்குகளிலும் ஆண் மைய சிந்தனையும், ஆணாதிக்கமும் விரவியிருக்கிறது. அப்படித்தான், ‘சப்டைட்டில்’ துறையிலும். திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்யும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள், ரேக்ஸ் மிக முக்கியமானவர்.
விஜயின் 10 படங்களுக்கு தொடர்ச்சியாக சப்டைட்டில் எழுதியவர் ரேக்ஸ்தான். அதில், மெர்சலும் அடங்கும். மொத்தமாக, 400 திரப்படங்களுக்கும் மேல் சப்டைட்டில் எழுதியிருக்கிறார். ‘சப்டைட்டிலிஸ்ட்’ என்பதை மொழிபெயர்ப்பாளர் என சொல்லிவிட முடியாது. அது ஒரு கலை. அந்த கலையின் நுணுக்கங்களையும், இந்த துறையில் உள்ள சவால்களையும் ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’க்கு அளித்த பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார் ரேக்ஸ்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் முதன்முதலில் ரேக்ஸ் என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அதிலிருந்து அந்த பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. ”வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் எல்லோரும் என்னை ரேக்ஸ்னுதான் கூப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாமல், சினிமாவில் நிறைய ரேகாக்கள் இருக்காங்களே.”, சிரிக்கிறார்.
சினிமாவில் உள்ள பெரும்பாலானோர் சொல்வதுபோல ‘சப்டைட்டில்’ துறைக்கு வந்தது ஒரு விபத்து என்றுதான் ரேக்ஸ் சொல்கிறார். அவரது கணவர் ஹரிசரண் இயக்கிய ‘தூவானம் திரைப்படம்தான்’ ரேக்ஸ்க்கு முதல் திரைப்படம். அந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மது அம்பாட், அவரை சப்டைட்டில் எழுத சொல்லியிருக்கிறார். இப்படித்தான் ஆரம்பித்தது ரேக்ஸின் பயணம். ஆனால், அப்போதுகூட இந்த துறையில்தான் நாம் ஜொலிக்கபோகிறோம் என்பது அவருக்கு தெரியாது.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்திற்கு சப்டைட்டில் எழுதியதற்கு ரேக்ஸ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அப்போதுதான், “நாம் சப்டைட்டில் நன்றாகத்தான் எழுதுகிறோம்”, என்று அவருக்கு தோன்றியது. ஆனால், விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் வெற்றியால் இவருக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது. ஆனால், எந்திரன் படத்திற்கு பின் காட்சிகள் மாறின. “எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு ‘சப்டைட்டிலின்’ முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது. குறுகிய காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எல்லோரும் அவரவரின் திரைப்படங்களுக்கு சப்டைட்டில் எழுத வேண்டும் என விரும்பினர். இந்த மாற்றம் சங்கர்-ஏ.ஆர்.ஆர்-ரஜினிகாந்த் மூவரின் மேஜிக்கால் விளைந்தது.”, என்கிறார் ரேக்ஸ்.
இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸான இரண்டு திரைப்படங்களில் ரேக்ஸின் பங்குண்டு. மெர்சல் மற்றும் கொடிவீரன். சப்டைட்டிலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதில் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்தான் டாப் என்கிறார் ரேக்ஸ். “2011-ஆம் ஆண்டில் ‘காவலன்’ திரைப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது விஜய், நான் உட்பட படக்குழுவினர் எல்லோரும் அந்த விழாவில் கலந்துகொண்டோம். அங்கு, விஜய்க்கு கிடைத்த ஆதரவைபார்த்துவிட்டு, “உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்னு விஜய் சொன்னாரு. அவருடன் நான் தொடர்ச்சியாக பணிபுரிந்த 10-வது திரைப்படம் மெர்சல்”, என்கிறார்.
திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் புத்தகம், கட்டுரை எதுவாக இருப்பினும் மொழிபெயர்ப்பு செய்யும்போது, அதன் சாராம்சம் நிலைத்திருக்க வேண்டும். அதில் அதிக கவனம் செலுத்துவதுதான், ரேக்ஸ் மற்ற சப்டைட்டிலிஸ்டுகளிடமிருந்து தனித்துவம் பெறுகிறார். வட்டார வழக்கை மாற்றாமல், அதன் இயல்பு தன்மையுடன் எழுதும்போது அதற்கு இன்னும் சிறப்பு கூடுகிறது. “’ஐயோ’ என்ற வார்த்தை இப்போது ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் உள்ளது. அந்த இடத்தில் ‘Ouch' என்ற வார்த்தையை பயன்படுத்தினீங்கன்னா சிரிப்பு வரும். அதன்மூலம், கதாபாத்திரத்தின் வலியை கொண்டுவர முடியாது. அம்மா, அண்ணா, அக்கா வார்த்தைகளையும் நான் பயன்படுத்துகிறேன். மலையாளத்தில் ‘ஏட்டா’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். இனம் சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்தும்போதுதான் சப்டைட்டில் முழுமைபெறும். மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற இடத்தில்தான் நான் ஆங்கில மொழிபெயர்ப்பை உபயோகிப்பேன். இரண்டுமே கலந்திருக்க வேண்டும்”, எனக்கூறும் ரேக்ஸ், இதைத்தான் தன் வெற்றியின் தாரகமந்திரமாக கொண்டிருக்கிறார்.
இன்னும், சப்டைட்டில் எழுதுவதற்கு அவர் கொண்டிருக்கும் விதிமுறைகளை விளக்குகிறார். ”வாசிப்பை எளிதாக்க என்னுடைய சப்டைட்டில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வாசிக்கும்போது கவனத்தை சிதறடிக்கும் என்பதால், நிறுத்தல் குறிகள் (Full stops) இருக்காது. நானும், என்னுடைய குழுவினரும் சப்டைட்டில் எழுதும்போது, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் அப்படியே மொழிபெயர்க்காமல், ஆங்கில வடிவத்திலேயே யோசித்து எழுதுவோம்.”, என கூறுகிறார் ரேக்ஸ்.
திரைப்படங்களில் பாடல்களும் சப்டைட்டில் செய்யப்பட வேண்டும் என ரேக்ஸ் உறுதியாக நம்புகிறார். “சப்டைட்டில் என்பது வெறும் ஆங்கிலம் மட்டுமல்ல. அது ஒரு கலை என்பதை பலரும் உணரவில்லை”, என ஆதங்கப்படுகிறார் ரேக்ஸ். “கண்ணதாசன் பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே ‘மோனோலாக்’ முறையில் மொழிபெயர்த்தால், அசல் வரியின் அழகை நீங்கள் திருடுவதற்கு சமம். மக்களுக்கு அதன் அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இசைக்கு மொழியில்லை, ஆனால் அந்த பாடல் என்ன சொல்ல வருகிறது என்பதை தெரிந்துகொள்வது இன்னும் அர்த்தத்தை தரும்,”, ரேக்ஸ்.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே சப்டைட்டில் எழுதிவந்த ரேக்ஸ் மற்றும் அவரது குழுவினர், இப்போது 4 தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்கின்றனர். ”என் குழுவில் 15-18 பேர் இருக்கின்றனர். நான் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள் சிலரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். தெலுங்கில் சாகித்ய அகாதமி விருது பெற்ற கௌரி கிருபானந்தன் என்பவர் தலைமையில் சப்டைட்டில் பணிகள் நடைபெறுகின்றன. மலையாளத்தில் லதா அம்பாட் சப்டைட்டில் செய்கிறார். என்னுடைய குழுவினர் இல்லாமல் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. ஹரிணி, கீர்த்தி, கிரிஷ், சேத், உஷா, இவர்களெல்லாம் என் குழுவில் முக்கியமானவர்கள்”.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில், சப்டைட்டிலுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் கோலிவுட் முதலிடத்திலும், அதற்கடுத்தபடியாக மலையாள மொழி திரைப்படங்களும் இருப்பதாக ரேக்ஸ் கூறுகிறார். "அரபு நாடுகளில் தமிழ் திரைப்படங்களை திரையிட அரபு மொழியில் சப்டைட்டில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதனாலேயே, நிறைய தமிழ் படங்கள் முதலில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் எழுதப்பட்டு, பின்னர் அரபு மொழி சப்டைட்டிலுக்காக எகிப்துக்கு அனுப்பப்படும். கதை திருட்டு நடக்கக்கூடாது என்பதில் நாம் அதிக கவனம் செலுத்துவதால், ஆங்கில சப்டைட்டிலை எகிப்துக்கு அனுப்பும்போது, படத்தின் காட்சிகளை அனுப்பமாட்டோம்”, என விவரிக்கிறார். “பாலினம், எத்தனை பேர் உரையாடலில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை பொறுத்தெல்லாம், அரபு மொழியில் அர்த்தம் வேறுபடும். யார் என்ன சொல்கிறார் என்பதை கூறாமல், சப்டைட்டில் நிறைவு பெறுவதில்லை. அதனால், நானும் ஏ.பி.இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து பாலினம் சார்ந்த வார்த்தைகளுக்காக (Gender Code) புதிய வார்த்தைகளை கண்டறிந்து முன்னிலைப்படுத்தினோம். அதன்மூலம், ஆங்கிலத்திலிருந்து அரபு மொழியில் சப்டைட்டில் எழுதுபவர்கள் புரிந்துகொள்ள முடியும். அதனால், சப்டைட்டில் சிறப்பானதாக இருக்கும்”, என கூறுகிறார் ரேக்ஸ்.
ஹீரோ டாக்கீஸ், டெண்ட்கோட்டா, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், கூகுள் பிளே, ஐ டியூன்ஸ், ஸ்டேக்ஹோல்டர்ஸ் உள்ளிட்ட திரைப்பட இணையத்தளங்கள், சப்டைட்டிலின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்திருக்கின்றன. “எல்லாவற்றிற்கும் சப்டைட்டில் எழுதுவதற்கு நிச்சயம் அதிக காலம் தேவை. நான் சப்டைட்டில் எழுதிய சில படங்களுக்கு, மலேசியாவில் உள்ள அப்படங்களின் டிவிடிக்களில் வேறு சப்டைட்டில்கள் இருக்கும். ஒருமுறை கலிஃபோர்னியாவின் சான் டீகோ வழியாக விமானத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு முத்தாசி கதா திரைப்படத்திற்கு வேறு சப்டைட்டில்கள் இருந்தன. எதற்கு, இப்படங்களுக்கு மறுமுறை சப்டைட்டில் செய்ய வேண்டும்? தயாரிப்பாளர்களிடமிருந்து எஸ்.ஆர்.டி. (திரைப்படங்களின் சப்டைட்டில்களின் ஃபைல்) ஃபைல்களை வாங்கிக்கொள்ளலாம். இம்மாதிரியான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன்.", என நம்பிக்கையுடன் கூறுகிறார் ரேக்ஸ்.
தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.