தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை அறிவித்தார். நற்பணி மன்றமாக இருந்த தனது விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என பிரகடப்படுத்தினார். இந்நிலையில், நடிகர் விஜய், இன்று சனிக்கிழமை (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, நேற்றைய தினம் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறினார். இது தொடர்பான அறிக்கையை பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டு இருந்தார்.
அதில், தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்குப் பதிலாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், விஜய்யின் உத்தரவை மீறும் வகையில், நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி, நடந்த சாகச நிகழ்ச்சியில் சிறுவனின் கையில் தீ பற்றி ஏறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் மாவட்ட தலைவரின் ஏற்பாட்டில் நீலாங்கரையில் நடந்த இவ்விழாவில், கையில் தீ பற்ற வைத்து சிறுவன் 4,5 ஓட்டை உடைத்து சாகசம் செய்ய இருந்தார். அப்போது, சிறுவன் கையில் தீ குப்பென்று பற்றிக் கொண்டது. பெட்ரோல் என்பதால் உள்ளங்கையில் தொடங்கிய தீ, முழங்கை வரை பரவியது.
பெட்ரோலை சிறுவன் கையில் கொஞ்சமாக ஊற்றி விட்டு அங்கே அருகில் நின்று இருந்தவரின் கையில் இருந்த பெட்ரோல் எதிர்பாராத விதமாக மீண்டும் சிறுவன் மீது கொட்டியது. இதனால், இருவர் மீதும் தீ பரவியது. இதில், சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். காப்பாற்ற வந்தவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், விஜய்யின் உத்தரவை மீறி இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து இருப்பது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். சிலர், 'விஜய்யின் வார்த்தைக்கு அவரது ரசிகர்கள் எப்படி மரியாதை கொடுக்கிறார்கள் பாருங்கள்' விமர்சித்து வருகிறார்கள். சிலர், விஜய்யின் உத்தரவுக்கு அவரது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்படித் தான் நடந்து கொள்வார்களா? என்றும், உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“