பிக் பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் மீரா மிதுன் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட மீரா மிதுன் தனது நடவடிக்கைகள் மூலம் சர்ச்சையைக் கிளப்பினர். இதனால், போட்டி விதிகளின்படி அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் மீரா மிதுன் தொடர்பாக எழும் சர்ச்சைகள் ஓயவில்லை.
அண்மையில், தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் பற்றி பேசிய மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யா நெப்போட்டிஸம் தயாரிப்புகள். நெப்போட்டிஸத்தால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்கிறார்கள் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள்.
மீரா மிதுனும் பதிலுக்கு விஜய், சூர்யா பற்றி கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டார். அதோடு, விஜய் அவரது மனைவி சங்கீதா பற்றியும் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா பற்றியும் தவறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனால், கோபமடைந்த விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகை சனம் ஷெட்டி, மீரா மிதுன் நடிகர் விஜய்க்கு எதிரான அவதூறுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக காவல் துறையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடனடியாக மீராமிதுன் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
அதே போல, நாகர்கோவிலில் விஜய் ரசிகர்கள், மீரா மிது மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"