முதலில் குடும்பத்தை கவனிங்க என்று நடிகர் விஜய் கூறியதாக ரசிகர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார். அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏராளமான நற்பணிகளைச் செய்து வருகின்றனர். கடந்த சில தேர்தல்களிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர். அரசியலுக்கு வர விரும்பும் விஜய் அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவகையில், இன்று (நவம்பர் 20) விஜய் தனது ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்கள் விஜய் உடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
சந்திப்புக் குறித்து பேசிய விஜய் ரசிகர்கள், தளபதி எங்களோட தனித்தனியா போட்டோ எடுத்துக்கிட்டார். முதலில் குடும்பத்தைப் பாருங்க என அட்வைஸ் பண்ணார். அப்புறம் உங்கள் முடிந்த உதவிகளை ஏழைக்கு செய்யுங்கள் என்று கூறினார்.
அப்புறம் விலையில்லா உணவகம் நடத்துவதற்கும், இலவசமாக பால், ரொட்டி வழங்குவதற்கும் வாழ்த்து சொன்னார். நீங்கள் வாங்கும் சம்பளத்தில் உங்கள் குடும்பத்தை பார்த்துக்கிட்டு, முடிந்தால் ஏழைக்கு உதவுங்கள் என்று சொன்னார். இது முழுக்க முழுக்க ரசிகர்களுடனான சந்திப்பாகவே அமைந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவரை பார்த்தது, எங்களுக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.
பால் அபிஷேகம் செய்ய வேண்டாம், அதனை குழந்தைகளுக்கு கொடுங்கள் என்று அறிவுரை கூறினார். போஸ்டரில் நாளைய முதல்வர் என்ற வாசகங்களை தவிர்க்க சொன்னார். விலையில்லா மக்கள் உணவகத்தை உங்களால் முடிந்தால், தமிழகம் முழுவதும் செயல்படுத்துங்கள் என்று கூறினார். வாரிசு திரைப்படம் குறித்து எந்த பேச்சும் இடம்பெறவில்லை. இவ்வாறு ரசிகர்கள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil