2023-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக தற்போது படத்தின் 2-வது பாடலை இன்று வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'லியோ' லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியான லியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மட்டுமின்றி ஐரோப்பாவிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே லியோ படம் ஜெர்மனியில் 68,000 யூரோக்களை முன்பதிவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் சாதனையை முன்பே லியோ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியின் 'ஜெயிலர்' 66,000 யூரோக்களை மட்டுமே வசூலித்ததாக கூறப்படும் நிலையில், படம் ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்களுக்கு முன்பே லியோ படம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே லியோ படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ 1000 கோடியை கடக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் நடிகரின் முந்தைய படமான 'மாஸ்டர்' நல்ல வரவேற்பைப் பெற்றதால், 'லியோ' ஹிந்தி பெல்ட்டில் நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் 'லியோ' படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“