விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில், அதிக வசூல் செய்த தமிழ் படமாக புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளிவந்த லியோ படத்தில் விஜய் உடன் 15 வருட இடைவெளிக்குப் பின் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்தை தயாரித்தார்.
படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே வசூலை வாரிக் குவித்தது. மேலும் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் எந்த தொய்வும் இல்லை. வெளியான 4 நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடியை லியோ படம் வசூலித்தது.
மேலும், படம் வெளியாகி 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலை ‘லியோ’ படம் ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
பின்னர் லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதன்மூலம் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3 ஆவது வாரத்திலும் லியோ படம் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டி வருகிறது.
இந்தநிலையில், ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, "லியோ" திரைப்படம் வெளியான 17 நாட்களில் "ஜெயிலர்" திரைப்படத்தின் வாழ்நாள் மொத்த வசூலை முறியடித்து கேரள பாக்ஸ் ஆபிஸில் (KBO) ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. இந்த அசாதாரண சாதனை "லியோ" திரைப்படத்தை புதிய தமிழ் சினிமா ஹிட் மற்றும் கேரளாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற நிலைக்கு உயர்த்தியது.
கேரளாவில் "லியோ" படத்தின் விநியோகஸ்தர் கோகுலம் மூவீஸின் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த விதிவிலக்கான சாதனையை உறுதிப்படுத்தியுள்ளது. "லியோ" கேரளா பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பட்டத்தை பெருமையுடன் கொண்டுள்ளது, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வெற்றியாக அதன் இடத்தை உறுதிப்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“