லியோ படத்தின் 3 ஆம் பாடலாக ‘அன்பெனும்’ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Advertisment
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் லியோ படம் உருவாகியுள்ளதால், படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய் உடன் 15 வருட இடைவெளிக்குப் பின் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம், அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது.
லியோ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவெ வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. நா ரெடி தான் மற்றும் பேடாஸ் ஆகிய இரண்டு பாடல்களும் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.
இந்தநிலையில், லியோ படத்தின் மூன்றாம் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, மூன்றாம் பாடலாக அன்பெனும் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் லோதிகா பாடியுள்ளனர். உயிர் பாதி உனக்கே... உன்னில் பாதி எனக்கே... எனத் தொடங்கும் பாடல் த்ரிஷாவை பார்த்து விஜய் உருகுவதாக உள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“