பொங்கல் பண்டிகை முன்னிட்டு ‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மாஸ்டர் பொங்கல் என கொண்டாடி வருகின்றனர்.
உலகளவில் வெளியான மாஸ்டர் திரைப்படம், இந்தியாவில் மத்திய இந்தியா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கான , ராஜஸ்தான், டெல்லி / உ.பி., மற்றும் கிழக்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இந்தி, தமிழ் மலையாளம், தெலுங்கு என 500 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது.
வெளியான முதல் நாளில், மாஸ்டர் திரைப்படம் ரூ .44 கோடி வசூல் செய்தது. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ .25.40 கோடி வசூலாகும. கர்நாடகா, கேரளாவில் முறையே ரூ .5 கோடி மற்றும் ரூ .2.17 கோடி வசூல் செய்தது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ .10.4 கோடி வசூலாகியுள்ளது.
முன்னதாக, தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணயம், கூறுகையில், விஜய்யின் மாஸ்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றும் தியேட்டர்களில்100% இருக்கைக்கான உத்தரவை அரசாங்கம் ரத்து செய்ததன் காரணமாக, தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் படத்தை திரையிட உள்ளதாகவும் தெரிவித்தார். 50% இருக்கை விதியை மீறியதாக சென்னையில் காசி திரையரங்கம் உள்ளிட்ட10 திரையரங்குகள் மீதும், திரையரங்க மேலாளர்கள் மீதும் இந்திய சட்டம் 188 மற்றும் 269 கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் முதல் நாளில் கிட்டத்தட்ட 220 ஷோக்களை புக் செய்து அந்நாட்டில் புதிய சாதனை படைத்தது.
இதற்கிடையே, மாஸ்டர் முழுப் படமும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி வெப்சைட்களில் லீக் ஆனது. டெலகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக படத்தின் லிங்க் பகிரப் படுவதாகவும் கூறப்பட்டன. இந்த நிலையிலும், மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது.