நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகுமா என்று அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் முதன்மையான படமாக உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே முடிந்துவிட்டன. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மாஸ்டர் படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.
பொது முடக்கத்திற்கு முன்பே, மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் ஆகிய பாடல்கள் வெளியாகி பிரபலமானது. இதனைத் தொடர்ந்து, இந்த படத்துக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளுக்கு கடந்த மாதம் குவிட் பண்ணுடா பாடல் வெளியாகி வைரலானது.
ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் பலப்பரீட்சை நடக்கும். கடந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் திரைப்படமும் கார்த்தி நடித்த கைதி படமும் வெளியாகி வசூலைக் குவித்தன.
இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வெளியாகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொது முடக்கத்தால் தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், திரையரங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கல் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயின் மாஸ்டர் திரைப்படம் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் வதந்தி என்று விரைவிலேயே தெரியவந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகிறது. திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்கள் என்ன மாதிரியான கருத்துகளை தெரிவிக்கிறார்கள் என்பதைப் பொருத்து படத்தை வெளியீடுவது குறித்து யோசிப்பதாக கூறுகின்றனர். மாஸ்டர் படத்தின் தயாரிப்புக் குழு, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. அதனால், தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"