நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதோடு மாஸ்டர் டீசர் இந்தியாவிலேயே மிக அதிகமான லைக்குகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பே படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோர் தயாரித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, தீபாவளி பண்டிகைக்கு விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான உடனேயே ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் கம்மெண்ட் செய்தும் லைக் செய்து வைரலாக்கினார்கள்.
இந்த நிலையில், எக்ஸ்.பி தயாரிப்பு நிறுவனம், மாஸ்டர் டீசர் செய்த சாதனையை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில், “டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. 1.6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. மாஸ்டர் டீசர் இந்தியாவிலேயே அதிகமான லைக்குகளைப் பெற்ற டீசராக மாறியுள்ளது. இது பெஸ்ட் மோட்” என்று தெரிவித்துள்ளது.
விஜய் ரசிகர்கள் மாஸ்டர் டீசர் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் புதிய சாதனை படைத்துள்ளதை தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மாஸ்டர் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில், 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 1.8 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது. 14 ஆயிரம் டிஸ் லைக்குகளைப் பெற்றுள்ளது. 1.8 லட்சம் கம்மெண்ட் பெற்றுள்ளது. இதன் மூலம் மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் இடையே மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"