அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்பேத்கரிலிருந்து நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் படம் வெளியானலே அன்றைய நாள் திருவிழா தான். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும், அரசியலில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ள விஜய் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் நேரடியாக போட்டியிட்டு கணிசமான தொகுதிகளை வென்றுள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழ் சினிமாவில் மழை பாடல் என்பது ஹீரோயின்களுக்கு திட்டமிட்ட கொலை; ஷோபனா
இந்தநிலையில், ஏப்ரல் 14ம் தேதி (நாளை) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே வருகிற 15 ஆம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும், இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது.
இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் தனது அரசியல் பயணத்தை அம்பேத்கரிலிருந்து தொடங்குகிறாரா என்று ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil