விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் விமர்சனம்
கதைக்களம்:
ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் தொடங்குகிறது. சலீம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அமைச்சருடைய மகனை கொலை செய்துவிட்டு தப்பித்து விடும் ஹீரோ சலீம் (விஜய் ஆண்டனி) அதன்பிறகு சரத்குமாருடன் ஒன்றாக இணைந்து ஏஜெண்டாக மாறுகிறார். அதன் பிறகு தன் காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் எதிர்பார்க்காத விதமாக எதிரிகளால் விஜய் ஆண்டனியின் மனைவி கொல்லப்பட, தன் மனைவி இறந்த நேரத்தில் மழை பெய்ததால் விஜய் ஆண்டனி மழையை வெறுக்கிறார்.
எதிரிகளால் நடந்த தாக்குதலில் அவருடைய மனைவியுடன் சேர்ந்து விஜய் ஆண்டனியும் இறந்துவிட்டார் என்று சரத்குமார் அனைவரையும் நம்ப வைத்து விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? அவருடைய மனைவி கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? விஜய் ஆண்டனி தன் மனைவியை கொன்றவர்களை பழி வாங்கினாரா இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு
எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத ஒரு நிதானமான ஏஜெண்டாக தனது இயல்பான நடிப்பை வெளிப்டுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி. அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான அளவான நடிப்பை அழகாக கொடுத்துள்ளார். சத்யராஜ், சரத்குமார் ஆகியோருடைய கதாபாத்திரங்களுக்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. மேலும் முரளி சர்மா, மேகா ஆகாஷ், தனஞ்ஜெயா, தலைவாசல் விஜய் ஆகியோர் படத்திற்கு தகுந்த நடிப்பை கொடுத்துள்ளனர்
இயக்கம் மற்றும் இசை
தீமை செய்பவன் அழிவான், கடைசியில் நன்மை தான் வெல்லும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு சுவாரசியமான த்ரில்லர் கதையை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பாடல்கள் பெரிதாக மனதில் இடம் பெறவில்லை, பின்னணி இசை ஓகே.
படத்தின் பிளஸ்
⦿ விஜய் ஆண்டனி நடிப்பு
⦿ கிளைமாக்ஸ் காட்சி
⦿ பின்னணி இசை
⦿ சொல்ல வந்த கருத்து
படத்தின் மைனஸ்:
⦿ சுவாரசியமில்லாத திரைக்கதை
⦿ சுமாரான ஆக்ஷன் காட்சிகள்
⦿ ஒட்டாத எமோஷனல் காட்சிகள்
⦿ அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள்
மொத்தத்தில் ஒரு சுமாரான த்ரில்லர் படமாக முடிகிறது இந்த "மழை பிடிக்காத மனிதன்"
விமர்சனம்: நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“