இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இது பயோபிக் காலம் என்று சொன்னால் மிகையல்ல. பழம்பெரும் நடிகை சாவித்திரி, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சினிமாக்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் குயீன் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல, கங்கனா ரணாவத் நடித்த தலைவி ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சினிமா எடுக்கப்படுவதாகவும் அதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கப்போவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். விரைவில் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஒரு ஆஃப் பிரேக் சுழற்பந்து வீச்சாளர். முத்தையா முரளிதரன் வீசிய தூஸ்ரா பந்துகளைக் கண்டு மிரளாத பேட்ஸ்மேன்களே இல்லை என்று கூறலாம்.
இலங்கை மலையகத் தமிழரான முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 350 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய முத்தையா முரளிதரன், அவர் 2011-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அவருடைய சாதனையை இனிவரும் காலங்களில் யாராவது முறியடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்.
கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்துள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளதாகவும் அதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"