தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சினிமா பின்னணி இல்லாமல் சினமாவில் வெற்றி பெற்றுள்ள இவர், பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். மேலும் சினிமாவில் ஹீரோ மட்டுமல்லாமல் வில்லன், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் தனது நடிப்பால் முத்திரை பதித்து வருபவர் விஜய் சேதுபதி. தற்போது கூட இவர் வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், விஜய் சேதுபதி, பட்டா கத்தியால் கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிப்பு கிளம்பியது.
இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. எனது பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியிருப்பேன்.
தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டா கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்தப் படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகியுள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டு தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"