நடிகர் விஜய் சேதுபதி நடத்தும் ‘நம்ம ஊரு ஹீரோ’ நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாழ்க்கையில் சாதித்த திருநங்கைகளை அறிமுகப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நம்ம ஊரு ஹீரோ எபிசோட் பெரிய அளவில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது
தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நட்சத்திர நடிகளுக்கு ஒரு ரசிகர் படை இருப்பதைப் போல நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சினிமாவில் ஹீரோ நட்சத்திர அந்தஸ்து எதையும் பார்க்காமல் கதையையும் தனது கதாபாத்திரத்தையும் மட்டுமே நம்பி நடித்துவருகிறார்.
விஜய் சேதுபதி அவருடைய சினிமா கதாபாத்திரங்களைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் மிகவும் எளிமையானவர் என்று பாராட்டப்படுபவர்.
இதுதான் உண்மையான மாற்றம்..!
நம்ம ஊரு ஹீரோ
முழு எபிசோடிற்கு: https://t.co/r25uLn55as#SunTV #SociallySun #NammaOoruHero #Throwback #VijaySethupathi@VijaySethuOffl pic.twitter.com/zp6EJTVfov— Sun TV (@SunTV) March 3, 2020
சமூகத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் யதார்த்தமான முற்போக்கான கருத்துகளைக்கொண்டவர் என்பது அவருடைய பேட்டிகளைப் பார்க்கும் எவரும் கூறமுடியும்.
அண்மையில், விஜய், விஜய் சேதுபதி போன்றவர்களை வைத்து மதமாற்ற பிரசார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று ஒரு அவதூறு தகவல் பரவியதைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, மிகவும் யதார்த்தமாகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் சவுக்கு போல சுளீர் என “டேய்... வேற வேலை இருந்தா போய் பாருங்கடா” என்ற ஒற்றை வாசகத்தில் பதில் கொடுத்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்றார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோ அந்தஸ்து பற்றி எல்லாம் கவலைப்படாமல் நல்ல கதா பாத்திரம் இருந்தால் எந்த நட்சத்திர நடிகருடனும் இணைந்து நடிக்கத் தயார் என்று ரஜினி, விஜய் உச்ச நட்சத்திர நடிகர்களுடனும் தயங்காமல் நடித்துள்ளார்.
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தது அவருடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மயில் கல்லாக அமைந்தது.
தமிழகத்தில் கேபிள் டிவி அறிமுகமான காலத்தில் சன் டிவிதான் பிரபலம். கேபிள் டிவி இணைப்பை இன்றும் கிராமங்களில் சன் டிவி கனெக்ஷன் என்று சொல்வதைக் கேட்கலாம். கடந்த சில ஆண்டுகளாக தமிழில் சன் டீவி-க்கு நிகராக விஜய், ஜீ, கலர்ஸ், போன்ற டிவி சேனல்கள் தங்கள் வெற்றிக்கொடிகளை நாட்டத் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், சன் டிவி தனது முத்திரையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிந்திக்க வைக்கவும் மக்களை கவரும்படியாக ‘நம்ம ஊரு ஹீரோ” என்று ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
வாழ்கையில் பல்வேறு நிலைகளில் உள்ள சாதித்த மனிதர்கள், வாழ்கையில் பலருக்கும் உந்துதலாக இருக்கும் மனிதர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி கௌரவிக்கும் வகையில் இந்த நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி அமைந்துள்ளது. அதிலும், விஜய் சேதுபதி அவர்களுடன் நடத்தும் உரையாடல் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
அந்த வகையில், விஜய் சேதுபதி வாழ்க்கையில் சாதித்து பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் திருநங்கைகளை அழைத்து உரையாடிய நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேட்டரிங் சர்வீஸ் மற்றும் திருநங்கைகள் இடையே செயல்பட்டுவரும் திருநங்கை தஸ்லிமா நஸ்ரின், பரத நாட்டியக் கலைஞர் திருநங்கை பொன்னி ஆகியோரை விஜய் சேதுபதி அவருக்கே உரிய யதார்த்தமான மாஸான பாணியில் நேர்காணல் செய்து அவர்களுடன் உரையாடிய நிகழ்ச்சி வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.