புதிய படத்தின் போஸ்டரை வெளியிடப்போவதில்லை என விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
சென்னை முழுவதும் நேற்று காலை முதல் சாலையில் செல்லும் பலரின் கண்களிலும் ஒரு ஆபாச வார்த்தைகள் இருக்கும் போஸ்டர் தென்பட்டது. அது தான் ___ போட ஒரு பொண்ணு வேணும் என்ற வாக்கியத்தை கொண்ட போஸ்டர். இந்த போஸ்டரை பார்த்த பலரும், ச்சீ என வெறுப்பை உமிழ்ந்தனர். இதனால் எழுந்த பெரிய சர்ச்சை விஜய் சேதுபதியையும் விட்டு வைக்கவில்லை.
விஜய் சேதுபதி விளக்கம்
கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு நேற்று காலை சென்னை முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஆனால் போஸ்டரில் புதுமை செய்வதாக எண்ணிய படக்குழுவினர் படத்தின் தலைப்பில் உள்ள கடலை எனும் வார்த்தையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் கோடு மட்டும் போட்டு வெளியிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதை விட அதிகமாக விஜய் சேதுபதியை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இவ்வளவு மோசமான தலைப்பைக் கொண்ட படத்தின் போஸ்டரை அவர் வெளியிடலாமா எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.
இதையடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த விஜய் சேதுபதி இப்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் அந்தப் படத்தின் இயக்குனர் தனக்கு நீண்ட நாள் நண்பர் என்றும் அவரின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் இந்தப் பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருக்கு உதவும் பொருட்டு இந்த செயலை செய்ததாகவும் ஆனால் அது இப்படி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.