ஒரு நடிகன் பெரும் புகழோடு ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, வேறொரு முன்னணி ஹீரோவுக்கு வில்லனாக நடிப்பது என்பது இதற்கு முந்தைய கோலிவுட் சினிமா கலாச்சாரத்தில் நாம் காண்பது மிக அரிது. ஆனால், இன்று அதை மிக சர்வசாதாரணமாக செய்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
தமிழில் சினிமாவின் இன்றைய டாப் 5 ஹீரோ பட்டியலுக்குள் எப்போதோ நுழைந்துவிட்ட விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் தாண்டியும் இருப்பதை சமீபத்திய ஆந்திர மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பேட்டியில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
விஜய் சேதுபதியின் நடிப்பை சிரஞ்சீவி சிலாகிக்க, அவரது மகனும் தெலுங்கு முன்னணி ஹீரோவுமான ராம் சரண் தேஜா, '96 படத்தின் கிளைமேக்ஸில், விஜய் சேதுபதி கண்ணீர் சிந்தாமல் எப்படி நடித்தார்? நான் அவரது தீவிர ரசிகன்' என்று ஒருபடி மேலே சென்று கொண்டாடினார்.
சூது கவ்வும் படம் முதல் கமிர்ஷியல் ஹீரோவாகவும் ஜெயிக்கத் தொடங்கிய விஜய் சேதுபதியின் இன்றைய மார்க்கெட் நிலவரம், அவரே எதிர்பார்க்காத ஒன்று. ஆனால், உண்மையில் அவரது மார்க்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை விஜய் சேதுபதி வாங்குவதில்லை என்றும், தயாரிப்பாளருக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்வதிலும் 'தி பெஸ்ட்' என்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் ஒன்று.
இப்படித் தான் நடிக்க வேண்டும் என்று ஒரே ரூட்டில் செல்லாமல், எப்படி வேண்டுமானாலும் என்னால் நடிக்க முடியும் என்பதை பேட்ட படத்தில் ரஜினிக்கே வில்லனாக நடித்து நிரூபித்த விஜய் சேதுபதி, இப்போது விஜய்யின் 64வது படத்திலும் மீண்டும் தனது நடிப்புப் பசிக்கு இரை தேடியிருக்கிறார்.
பிகில் படத்தைத் தொடர்ந்து, 'மாநகரம்' புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விஜய் படத்தின் ஷூட்டிங், வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தின் விஜய்க்கு வில்லனாக, ஒரு கேங்ஸ்டர் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
Happy to associated with #ThalapathyVijay sir & special thanks to #Lalithkumar & @Dir_Lokesh ☺️#Thalapathy64 https://t.co/n3YdBEydvR
— VijaySethupathi (@VijaySethuOffl) September 30, 2019
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி, "இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்தது மகிழ்ச்சி. லலித் குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நெஞ்சார்த்த நன்றி" என்று கூறியுள்ளார்.
நினைத்தால், 10-15 கோடி சம்பளம் வாங்கி பாஸிட்டிவ் ரோலில் நடித்து, எதிரிகளை துவம்சம் செய்து, ரசிகர் பலத்தை சரமாரியாக அதிகரித்துக் கொண்டே போகலாம். ஆனால், ஒரு மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி, மெகாமாஸ் ஹீரோ விஜய்க்கு வில்லனாக நடிப்பது என்பது தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சியின் ஒரு அங்கமாகவே நாம் பார்க்க முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.