scorecardresearch

அகதிகளின் வலிகளை பிரதிபலிக்கிறதா? யாதும் ஊரே யாவரும் கேளீர் விமர்சனம்

விஜய் சேதுபதியின் கனவே மாபெரும் கலைஞராகி லண்டனில் நடக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது தான்

Yaathum Oree Yaavarum Kelir
யாதும் ஊரே யாவரும் கேளீர்

பொதுவாகவே அகதிகள் பற்றிய படம் தமிழில் மிக சொற்பமே, அந்த வகையில் அகதிகளின் வலியை உணர்த்தும் படமாக வெளிவந்திருக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” மக்களை கவர்ந்ததா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

சிறுவயதில் இருந்தே பல போர்களையும், அழிவுகளையும், வன்முறைகளையும் பார்த்து வளர்ந்த நாயகன்”விஜய் சேதுபதி” தன்னுடைய 18 வயதில் அகதியாக தமிழகத்திற்கு வருகிறார். விஜய் சேதுபதியின் கனவே மாபெரும் கலைஞராகி லண்டனில் நடக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது தான். அதற்காக பல முயற்சிகளில் அவர் ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கென்று எந்த ஒரு அடையாளமும் (Aadhar,Ration card etc) இல்லாததால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

அதன் பிறகு கரு. பழனியப்பன் உதவியோடு “கிருபாநிதி” என்ற பெயரில் விண்ணப்பிக்கிறார். ஆனால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஏனென்றால் அந்த கிருபாநிதி, போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி. இப்பிரச்சனையிலிருந்து விஜய் சேதுபதி தப்பித்தாரா? தன் கனவை நிறைவேற்றினாரா? என்பதை வலியுடன் சொல்லும் படமே யாதும் ஊரே யாவரும் கேளிர்.

நடிகர்களின் நடிப்பு:

விஜய் சேதுபதி அகதியாக நடித்திருக்கிறார் என்பதை விட அகதியாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு அகதிகளின் வலியையும் வேதனையும் ஒருசேர நமக்கு புரிய வைக்கிறது. பாவமான முகம், அமைதியான பேச்சு, சத்தங்களை கண்டு பயப்படும் எதார்த்தம், தனக்குரிய அடையாளம் தேடி அலையும் இளைஞன் என்று தன் அபாரமான நடிப்பை நடிப்பால் பாராட்டுகளை அள்ளுகிறார். அவருடைய கரியர் பெஸ்ட் நடிப்பு என்று இதை சொல்லலாம்.

மேலும் மறைந்த நகைச்சுவை கலைஞர் விவேக்கை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது. நாயகியாக வரும் மேகா ஆகாஷ், விஜய் சேதுபதிக்கு உதவுபவராக வரும் கரு பழனியப்பன், போலீசாக வரும் மகிழ்திருமேனி என அனைவரும் உண்மையான நடிப்பின் மூலம் படத்தை உயர்த்திருக்கிறார்கள்.

இயக்கம் மற்றும் இசை:

இலங்கை அகதிகளின்  வாழ்க்கையையும், வலியையும் திரைப்படமாக எடுத்ததற்கு இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் அவர்களின் வழிநிறந்த வாழ்க்கையை சொல்லி இருப்பதால் படம் மெதுவாகவே நகர்கிறது. அதன் பிறகு இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் கதைக்களம் இறுதியில் நம்மை கலங்க வைத்து விடுகிறது.வெற்றி வேல் மகேந்திரன் கேமரா யுத்த களம், கடல், காடுகள்,வன்முறைகள், கிராமம், நகரம் என பல பரிணாமங்களில் பயணித்து நம்மை மகிழ்விக்கிறது. விவேக் பிரசன்னாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

படம் எப்படி?

படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை நம்மில் பலரும் அறியாத அகதிகளின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். எந்தவித அடையாளங்களும் இல்லாமல் ,தன் சொந்த நாட்டை விட்டு ,சொந்த மண்ணை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறும் அவர்களின் வாழ்க்கையை பார்த்து, கனத்த இதையடுத்துடன் தான் நம்மால் திரையரங்கிலிருந்து வெளியே வர முடிகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் இலங்கை அகதிகளுக்காக விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் மாபெரும் கைத்தட்டல்களை பெறுகிறது. இதுபோன்ற எதார்த்த வாழ்வியல் படங்களை நாம் மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும்.

மொத்தத்தில் படம் மெதுவாக சென்றாலும், ஒரு சிறந்த படத்தை பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது.

நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay sethupathi yaathum oore yaavarum kelir movie review