சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள '96' சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.
ஆனால், படம் ரிலீசாக இருந்த தினத்தன்று அதிகாலை காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதற்கு, விஷால் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதாவது ‘96’ படத்தின் தயாரிப்பாளர் நந்த கோபால், நடிகர் விஷாலுக்கு தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு படத்தை வெளியிடலாம் என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த விஜய் சேதுபதி ரூ.1.50 கோடியை தானே விஷாலுக்கு தர முன்வந்தார். ஆனால் விஷால் தரப்பில் கூறுகையில், பண ரீதியாக விஷால் ஏராளமான வலியைச் சந்தித்து வருகிறார். இருப்பினும் விஜய் சேதுபதி தருவதாகக் கூறும் பணத்தை தர வேண்டாம். அந்த ரூ.1.50 கோடி விஷயத்தை விஷாலே கையாள்வார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் '96' படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம், மகேந்திரன் தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "நான் செஸ் விளையாடி இருக்கிறேன். ஆனால், முதன்முதலாக செஸ் போர்டில் நான் காய்களாக மாறினேன். என்னை வைத்து அந்த கேம் ஆடப்பட்டது. இது எனக்கு மிகப்பெரிய அனுபவம். இதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. விஷாலை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அவர் எப்படிப்பட்ட வலியை அனுபவித்து வருகிறார் என யாருக்கும் தெரியாது. பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்தது வெறும் 5 சதவிகிதம் தான். அதைத் தான் நீங்கள் செய்தியாக்கி வருகிறீர்கள். ஆனால், மீதம் 95 சதவிகிதம் நடந்தது என்ன என்பது எங்களுக்கு தான் தெரியும். அதையெல்லாம் வெளியே சொல்லவே முடியாது.
இங்கே ஆரம்பம் முதலே சிஸ்டம் இப்படித் தான் இருக்கிறது. இதனை இனி யாராலும் மாற்ற முடியாது. உண்மையை ஊடகங்கள் மூலம் மக்களிடம் சொன்னாலும், ஒரு தீர்வு கிடைக்கப் போவதில்லை. அதனால், அதை வெளியே சொல்வதே வேஸ்ட். யாராலும் இதற்கு தீர்வு சொல்ல முடியாது" என்றார்.