லியோ படத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் இடையில் ரசிகர்களை சந்தித்து கையசைத்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவின் தலகோனாவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் பலரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஷூட்டிங்கின் இடைவெளியில் நடிகர் விஜய் வெளியில் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அவரை பார்த்து ரசிகர்கள் ஆராவரத்தில் கையசைத்ததை பார்த்த விஜய் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்கிறார்.
இந்த வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான நா ரெடி தான் பாடலில் வந்த காஸ்டியூமில் விஜய் வந்திருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஆராவாரத்துடன் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நா ரெடி தான் பாடல் யூடியூப் தளத்தில் இதுவரை 31 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசால் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்களிலும் உள்ள ஒரு பொதுவான அம்சமான போதைப்பொருள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளதால் லியோ படம் எல்சியூ-ன் ஒரு பகுதியாக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் இந்த பாடலில் மர அட்டைப்பெட்டிகளில் உள்ள சின்னம் மறைக்கப்பட்டுள்ளது.
இது தேள் சின்னமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் (சூர்யா) கேரக்டருக்கு சொந்தமானது என்பதைக் குறிக்கிறது. இதனால் லியோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படம், டேவிட் க்ரோனெர்ன்பெர்க்கின் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக் என்று வதந்தி பரவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“