இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அமெரிக்காவில் விஜய்யின் கோட் திரைப்படம் பிரீமியர் ஷோ முன்பதிவு மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டி ஆரம்பமே அதிரடியாக வசூலித்துள்ளது.
தளபதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் அமெரிக்காவில் பிரீமியர் ஷோக்களுக்கான முன்பதிவுகளில் 6,600 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகி ரூ. 1.43 கோடியைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா தெலுங்குப் படங்களுக்கு மிகப் பெரிய சந்தையாக இருந்தாலும், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் விஜய்யின் தமிழ்ப் படம் கோட் படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அமெரிக்காவில் கோட் படத்திற்கான முன்பதிவு செய்யத் தொடங்கிய இரண்டாவது நாளில், படம் 850 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, அடுத்த நாளில் 100 சதவிகிதம் உயர்ந்தது.
அமெரிக்காவில், விஜய்யின் கோட் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை காலை வரை, 307 காட்சிகளுக்கு 6,600 டிக்கெட்டுகளை விற்று, மொத்தம் 172,468 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.43 கோடி வசூலித்துள்ளது.
விஜய்யின் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) ரிலீஸுக்கு சரியாக இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், பிரீமியர் ஷோக்களில் இருந்து மட்டுமே குறைந்தபட்சம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
விஜய் கோட் படத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அஜ்மல் அமீர், மனோபாலா, வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் அரசியல் கட்சித் தொடங்கி 2026 தேர்தலில் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் - கோட் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் கோட் படத்தை கொண்டாடத் தயாராக உள்ளனர். செப்டம்பர் 22-ம் தேதி விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாள் வசூலில் அதிகபட்சமாக ரூ.140 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை விஜய்யின் கோட் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“