/tamil-ie/media/media_files/uploads/2021/07/Barathi-Kannamma-3.jpg)
Barathi Kannamma Serial Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஓவ்வொரு நாளும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் பரபரப்பான கட்டங்களை அடைந்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோ பாரதியும் ஹீரோயின் கண்ணம்மாவும் வெண்பாவின் சதியால் வாழ்க்கையில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கண்ணம்மா ஹேமாவைக் காப்பற்றியதற்காக பாரதி வீடு தேடி சென்று கண்ணம்மாவுக்கு நன்றி சொல்கிறான். அவனுக்கு கண்ணம்மா முந்திரி கேசரி கொடுத்து உபசரிக்கிறாள். அதனால், பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மலையாளத்தில் புகழ்பெற்ற கருத்தமுத்து என்ற சீரியலின் ரீமேக்தான் பாரதி கண்ணம்மா சீரியல். டாக்டராக இருக்கும் பாரதி, ஓரளவு படித்த நல்ல குணமுள்ள கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், பாரதியின் தோழி வில்லி வெண்பா பாரதியை அடைய நினைக்கிறாள். அதனால், சதி செய்து பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்கிறாள். வெண்பாவின் சதியால் கண்ணம்மா மீது சந்தேகம் அடையும் பாரதி, அவள் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மா நிறைமாத கர்ப்பினியாக தெருத்தெருவாக நடக்கிறாள். வாரக்கணக்கில் பல எபிசோடுகள் கண்ணம்மாவை நடக்க விட்டார்கள். இதைப் பார்த்த நெட்டிசன்கள், பாரதி கண்ணம்மாவைப் பற்றி மீம்ஸ்களை பகிர்ந்தார்கள். கண்ணம்மா நடந்து நடந்து நிலாவுக்கே போய்விட்டாள். கண்ணம்மா நடந்து நடந்து செவ்வாய் கிரகத்துக்கே போய்விட்டாள். கண்ணம்மா நடந்து நடந்து அமெரிக்காவுக்கே போய்விட்டாள் என்று பலவிதமாக மீம்ஸ்கள் பகிரப்பட்டதால் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பாப்புலரானது.
கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறது. அதில், ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கே தெரியாமல் அவளுடைய மாமியார் சௌந்தர்யா எடுத்துக்கொண்டு சென்று வளர்க்கிறார். ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தை மட்டும்தான் பிறந்ததாக நினைத்து லட்சுமியை வளர்த்து வருகிறாள். சௌந்தர்யா ஹேமாவை வளர்த்து வருகிறாள். பாரதி ஹேமாவை தனது மகள் என்று தெரியாமல் வளர்ப்பு மகளாகக் கருதி பாசத்துடன் இருக்கிறான். ஹேமாவும் லட்சுமியும் ஒரே பள்ளியில் படிப்பதன் மூலம் அங்கே சமையல் செய்யும் கண்ணம்மாவிடம் ஹேமா சமையல் அம்மா சமையல் அம்மா என்று நெருக்கமாகிறாள். பாரதிக்கு சமையல் அம்மா கண்ணம்மாதான் என்பது தெரியவந்து பிரச்னை ஆகிறது.
இந்த சூழலில்தான், வெண்பா ஆட்களை வைத்து ஹேமாவைக் கடத்துகிறாள். ஆனால், பாரதி ஹேமாவைக் கடத்தியது கண்ணம்மாதான் என்று புகார் அளிக்கிறான். ஆனால், பாரதியின் அம்மா சௌந்தர்யாதான் கண்ணம்மாவை ஜாமீனில் எடுக்கிறார். வெளியே வந்த கண்ணம்மா ஹேமாவைத் தேடுகிறாள். ஹேமாவை கடத்தல்காரர்களிடம் இருந்து போராடி மீட்கிறாள். ஆனாலும், பாரதி, கண்ணம்மாதான் கடத்திவிட்டு இப்போது காப்பாற்றியதாக நாடகமாடுவதாக குற்றம்சாட்டுகிறான். ஆனால், ஹேமா கண்விழித்து தன்னை கண்ணம்மாதான் காப்பாற்றியதாகக் கூறுகிறாள். இதனால், மனம் மாறிய பாரதி, ஹேமாவைக் காப்பாற்றியதற்காக கண்ணம்மாவுக்கு நன்றி சொல்ல வீடு தேடி செல்கிறான்.
பாரதி, ஹேமாவுடன் கண்ணம்மாவுக்கு நன்றி சொல்ல வீடு தேடி சொல்லும் நிகழ்வு நாளைய (ஜூலை 2) எபிசோடில் ஒளிபரப்பாகிறது. அதனை விஜய் டிவி புரோமோவாக வெளியிட்டுள்ளது. அதில், கண்ணம்மாவை நேரில் சந்தித்து நன்றி சொல்வதற்காக பாரதி தனது மகள் ஹேமாவுடன் வீடு தேடி செல்கிறான். அங்கே பாரதிக்கு, கண்ணம்மா முந்திரி கேசரி கொடுத்து உபசரிக்கிறாள். ஹேமா, முந்திரி கேசரி பாரதிக்கு ரொம்ப பிடிக்கும், நீங்களும் அப்படியே செய்திருக்கீங்க, எப்படி சமையல் அம்மா? என்று கூறுகிறாள். பாரதி, ஹேமாதான் என் உயிர் அவளைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறான்.” என்று காட்டப்படுகிறது.
தமிழ் டிவி சேனல்களில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிற பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில், பாரதி கண்ணம்மாவை வீடு தேடி சென்று சந்திக்கிறான். அதனால், இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு உள்ளதா? அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.