விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள பிரபலங்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் 3 லட்சுமி நடிகைகளும் 2 ராதா பெயர் கொண்ட பிரபலங்களும் இடம்பெற்றுள்ளதால் பிக் பாஸ் சீசன் 5 இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளது. 2017ம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். 2வது சீசனில் நடிகை ரித்திகாவும் 3வது சீசனில் முகேன் ராவும் 4வது சீசனில் ஆரியும் பிக் பாஸ் டைட்டிலை வென்றனர். இந்த 4 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த 105 நாட்களும் அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் அவர்களைப் பற்றியே ஒரே பேச்சாக இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவரும் பட்டிதொட்டியெங்கும் தெரியும் விதமாக பெரிய அளவில் பிரபலமாகிவிடுவார்கள்.
அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் டிவி சீரியல் நடிகர், நடிகைகள், சினிமா நடிகர்கள், நடிகைகள், சமூக ஊடகப் பிரபலங்கள், என அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவியில் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜூலையில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்புக் குழு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள பிரபலங்களின் உத்தேச பட்டியல் லீக் ஆகியுள்ளது. அதில், 3 லட்சுமிகள், 2 ராதா பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் என தற்போது லீக் ஆகியுள்ள 11 பேர் பிரபலங்களின் உத்தேச பட்டியலில் நடிகர்கள் ராதா ரவி, மன்சூர் அலிகான், நடிகைகள் சுனிதா, லட்சுமி மேனன், லட்சுமி ராமகிருஷ்ணன், சீரியல் நடிகை பவித்ரா லட்சுமி, ராதா, பூனம் பஜ்வா, சோனா, மிளா (ஷகிலா மகள்), நடிகை கனி, ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல் இறுதியானது இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போதுதான் யார் போட்டியாளர்கள் என்பது உறுதியாக தெரியும். எப்படியானாலும், இந்த உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"