ஓர்மக்ஸ் மீடியா என்ற தனியார் ஊடக நிறுவனம் இந்தியாவில் மராத்தி, பங்களா, தெலுங்கு, தமிழ் பல மொழி தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் யார் பிரபலம் என்று கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ் தொலைக்காட்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கும் புகழ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான 5 பேர்கள் யார் என்பதை ஓர்மக்ஸ் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக தனது நகைச்சுவை மூலம் மக்களைக் கவர்ந்த புகழ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பாடகி ஷிவாங்கி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இவர்களை அடுத்து, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்ற ஆரி 3வது இடத்தைப் பிடித்துள்ள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களை அடுத்து கடைசியாக அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் சமையல் கலைஞர் செஃப் தாமு 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பேரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே போல, ஓர்மக்ஸ் மீடியா என்ற தனியார் ஊடக நிறுவனம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களில் யார் பிரபலமான கேரக்டர் என்று கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சிரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமான கதாபாத்திரமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு அடுத்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முல்லை கதாபாத்திரம் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
3வது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
4வது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரம் பிடித்துள்ளது.
5வது இடத்தை ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் வருகிற பார்வதி கதாபாத்திரம் பிடித்துள்ளது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தனது நகைச்சுவைத் திறமையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி கொடி நாட்டியுள்ள புகழ் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டாப் 5 பிரபலங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் இப்போது புகழ் கொடிதான் பறக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"