விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார், பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிகை சிம்ரனுடன் நடிக்க உள்ளதக தகவல் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி புகழ்பெறும் திறமைமிக்கவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தானாகவே திறக்கின்றன. அப்படி தொலைக்காட்சிகளில் பிரபலமானவர்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அப்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் இசை நிகழ்சியில் பங்கேற்ற பூவையார் கலந்துகொண்டார். சிறிய வயதிலேயே தந்தை இறந்துவிட்ட நிலையில், மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டே கானா பாடல்களைப் பாடி வந்த பூவையாருக்கு ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பூவையாரின் பாடலுக்கும் பூவையார் தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மாகாப ஆனந்த் நகைச்சுவைக்கும் கவுண்ட்டர் டயலாக்குகளுக்கும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அசத்தலாக பாடிய பூவையாரை எல்லோரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவே நினைக்கத் தொடங்கினர். ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட பூவையாருக்கு ஆறுதல் பரிசாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், பூவையாருக்கு பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கும் இரண்டு வரிகள் பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறிய வயதிலேயே அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று பிரபலமாகியுள்ள பூவையாருக்கும் மேலும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிகை சிம்ரன் உடன் நடிக்கும் வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்துள்ளது.
இந்தி சினிமாவில் இயகுனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதோடு 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில், அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் வாங்கினார். அந்தாதூன் தமிழ் ரீமேக் படத்துக்கு அந்தகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க இருந்த நிலையில் தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். தபு கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். நடிப்பு, நடனம் என்று சிம்ரன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதே போல, இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன் ஆகியோருடன் விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வாமக அறிவித்துள்ளனர். பிரசாந்த், சிம்ரன் உடன் நடிக்க கிடைந்த்திருக்கும் இந்த வாய்ப்பு உண்மையில், பூவையாருக்கு இன்னொரு ஜாக்பாட்தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“