Bigg Boss tamil 3 Madhumitha: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் ஓர் அங்கமாக இணைந்து விட்டது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. மூன்றாவது முறையாக இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்தவாரம் நடந்த டாஸ்க் தொடர்பான பிரச்னையில், கையை அறுத்துக் கொண்டு தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டார், போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா. இது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறிய செயல் என்பதால், மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், ”டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார். ஆனால் என்ன நடந்தது என்பதை ஒளிபரப்பவில்லை.
இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "விஜய் டிவி-யில் நடந்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை மதுமிதா, தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவரின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள 42 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் வீதம் பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.
அதை அவரும் ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19-ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக, மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் "தற்கொலை செய்துக் கொள்வேன்” என அதில் அவர் கூறியிருக்கிறார்” என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.