விஜய் டிவியின் பிரபல சீரியலான ’காற்றுக்கென்ன வேலி’ சிறப்பு கிளைமாக்ஸூடன் விரைவில் முடிவடைய உள்ளது.
விஜய் டிவியில் மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஜனவரி 2021 இல் தொடங்கி இந்த சீரியல் 760 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்ட பிறகு முடிவடைய உள்ளது. இந்தி தொடரான மோஹரின் என்பதன் ரீமேக் இந்த காற்றுக்கென்ன வேலி சீரியலாகும்.
இந்த சீரியலில் பிரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராம் மற்றும் மாளவிகா அவினாஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வீணா வெங்கடேஷ், தருண் மாஸ்டர், அக்ஷிதா அசோக், ராஜ் கண்ணா, ரேஷ்மா, பத்மினி, நளினிகாந்த், பி.ஆர்.வரலக்ஷ்மி, ஷம்மி, ஷியாம், சுந்தர், தயானா, ராகவேந்திரன் புலி, ஹரிஷ், கானா ஹரி, திலீப் குமார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடரை பிரான்சிஸ் கதிரவன், சந்திரசேகர் மற்றும் நிரவி பாண்டியன் ஆகியோர் எபிஷோடுகள் வாரியாக இயக்கி வருகின்றனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆசைப்படும் இளங்கலை மாணவி வெண்ணிலாவைச் சுற்றியே இந்த சீரியலின் கதை நகர்கிறது. பள்ளி முடிந்ததும் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி அவளது தந்தை வற்புறுத்தியபோது, அவள் தனது தாயின் உதவியுடன் தனது திருமணத்திலிருந்து தப்பி ஓடுகிறாள். தனது முன்னாள் ஆசிரியை சாரதாவின் உதவியுடன், சாரதாவின் மாமியார்களுக்குச் சொந்தமான மீனாட்சி சிவானந்தம் கல்லூரியில் சேர்கிறாள்.
சாரதாவின் மாமியார் மற்றும் அவரது சொந்த குடும்ப உறுப்பினர்கள் இருவரிடமிருந்தும் தொடர்ச்சியான எதிர்ப்பை எதிர்கொள்வதால், அவளது கல்வியைத் தொடர, கல்லூரியில் படிக்கும் வெண்ணிலா எடுக்கும் உரிமைக்கான போராட்டத்தை இந்தக் கதை முன்வைக்கிறது. கல்லூரியில் அவளது பொருளாதார பேராசிரியரும், சாரதாவின் பிரிந்த மகனுமான சூர்யா மற்றும் தன் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து, வெண்ணிலா தன் வழியில் வீசப்படும் ஒவ்வொரு தடைகளையும் கடந்து செல்கிறாள். இதற்கிடையில் தவிர்க்க முடியாமல், வெண்ணிலாவும் சூர்யாவும் ஒருவருக்கொருவர் காதலில் விழத் தொடங்குகிறார்கள். பல்வேறு தடைக்குப் பிறகு தற்போது அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் இருவரும் ஆசிரியர் மற்றும் மாணவியாக தொடர்கின்றனர்.
இந்தநிலையில், காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த சில மாதங்களாகவே டி.ஆர்.பி.,யில் பின்னடைவை சந்தித்து வருவதால், சீரியலை முடிக்க தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிறப்பு கிளைமாக்ஸூடன் சீரியல் விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“