விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிப்பரப்பாக தொடங்கிய கிழக்கு வாசல் சீரியல் ப்ரைம் டைமிலிருந்து மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டிருப்பதால் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முதன்முதலில் சின்னத்திரையில் களமிறங்கிய சீரியல் கிழக்கு வாசல். நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரியல் விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சன் டிவியில் சீரியல்கள் தயாரித்து வந்த ராதிகா, விஜய் டிவியில் தயாரிக்கும் சீரியல் இது.
இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பூவே பூச்சூடவா மூலம் ரசிகர் மனதைக் கவர்ந்த ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகிறார். ரேஷ்மாவின் வளர்ப்பு தந்தையாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார். இவர்களுடன் தினேஷ், அருண், ஆனந்த் பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
புதுமையான கதைக்களத்துடன் தொடங்கிய, இந்த சீரியலின் ஆரம்ப எபிசோடுகளை இயக்குநர் மனோஜ் இயக்கினார். ஆனால், சில வாரங்கள் கடந்தும் எதிர்பார்த்த ரேட்டிங் கிடைக்கவில்லை. இதனால் ஓரிரு வாரங்களிலேயே இயக்குநர் மாற்றப்பட்டார். மனோஜுக்குப் பதில் இப்போது நீராவிப் பாண்டியன் சீரியலை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் கிழக்கு வாசல் சீரியல் இரவு 10 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் முதல் ஒளிப்பரப்பாக உள்ளது. இதனால் சில சீரியல்கள் ஒளிபரப்பு நேரங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் ‘கிழக்கு வாசல்’ சீரியலின் நேரமும் மாறியிருக்கிறது.
ராடான் சீரியல்கள் என்றாலே பிரைம் டைமில் ஹிட் அடிப்பவை என்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் இந்த நேர மாற்றம் ராதிகாவை அப்செட் ஆக்கலாமெனப் கூறப்படுகிறது. ஆனால் ராடான் நிறுவன தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் வந்தது போல் தெரியவில்லை.
ஆனால், சீரியலில் நடிக்கும் சில நடிகர் நடிகைகள்தான் இந்த மாற்றத்தால் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ரேஷ்மா, வெங்கட், தினேஷ் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், ’ஏம்ப்பா. நாலு மணிக்கு யாராவது வீட்டில் டிவியை உட்கார்ந்து பார்த்திட்டிருப்பாங்களா,’ எனக் கேட்டதாகவும், அவருக்கும் மனவருத்தம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நான்கு மணி ஸ்லாட்டில் கிழக்கு வாசல் எப்படி போகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“