விஜய் டிவியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட முக்கிய சீரியல் ஒன்று மட்டும் இன்னும் ஒளிபரப்பு தொடங்கப்படவில்லை. ஒருவேளை அந்த சீரியலை நிறுத்திவிட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சீரியல் குழுவினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Advertisment
தமிழ் தொலைக்காட்சிகளில் கிட்டத்தட்ட ஒரு டஜன் முக்கிய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் உள்ளன. அவற்றில் எல்லாம் சீரியல்கள்தான் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவி சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வெற்றி நடைபோடும் சீரியல்கள் முடிவடைந்தால் அதன் 2 பாகம் எடுத்து ஹிட் அடிக்கிறார்கள்.
அந்த வகையில், விஜய் டிவியில் ஹிட்டான மௌன ராகம் சீரியல் முடிந்த உடன் மௌனராகம் 2 சீரியல் தொடங்கப்பட்டது. இந்த சீரியலும் முதல் பாகத்தைப் போல வரவேற்பு பெறத் தொடங்கியது. இதில் ஹீரோயினாக ரவீனா தாஹா நடித்து வருகிறார். முதல் பாகத்தில் குழந்தையாக இருந்த சக்தி தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகி வேலைக்கு செல்கிறாள் என்று காட்டப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் 2 சீரியல் படப்பிடிப்பு நடத்த முடியாததால் அந்த சீரியலின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மற்ற சீரியல்களும் வாரத்துக்கு 6 நாள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் 4 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பானது. சில சீரியல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு விஜய் டிவியில் மற்ற சீரியல்கள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், மௌன ராகம் 2 சீரியல் மட்டும் ஒளிபரப்பு தொடங்கப்பட வில்லை. அதுமட்டுமில்லாமல், விஜய் டிவியில் மௌன ராகம் 2 சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், அந்த நேரத்தில் தற்போது பாவம் கணேசன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால், இதனால், ரசிகர்கள் மௌன ராகம் 2 சீரியலை நிறுத்திவிட்டார்களா என்று ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், மௌன ராகம் 2 சீரியல் குழுவினர் சீரியல் ஒளிபரப்பு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “நண்பர்களே, தவிர்க்க முடியாத சூழல் காரணமாக மௌன ராகம் 2 சீரியல் படப்பிடிப்பு, ஒளிபரப்பு தொடர்பாக அறிவிப்புகள்: கொரொனா தொற்று நோய் சூழலில் கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்பு தொடங்க இயலவில்லை. எங்களிடம் மௌனராகம் 2 சீரியல் ஒளிபரப்புவதற்கு எபிசோடுகள் இருப்பு இல்லாததால் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், நாட்கள் சென்றுவிட்டன. நாங்கள் விரைவில் மீண்டும் வருவோம். நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். உங்களுடைய அன்பையும் ஆதரவையும் அப்படியே வைத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்கள்.
மௌன ராகம் 2 சீரியல் குழுவினரின் இந்த அறிவிப்பு மூலம் அந்த சீரியல் நிறுத்தப்படவில்லை. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த இயலாததால் தற்காலிகமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சீரியல் விரைவில் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்திருப்பது ரசிகர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"