ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5, விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பு சீரியல்களின் ஒளிப்பரப்பை பாதிக்கவுள்ளது, சீரியல் ரசிகர்களை கவலையுறச் செய்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பாகி வரும் சீரியல்களில் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனி இடம் உண்டு. பெரும்பாலான நேரங்களில் விஜய் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகின்றன. அதுவும் முதலிடத்தில் இருந்து வரும் பாரதிகண்ணம்மா சீரியலை வீழ்த்த, மற்ற டிவி சீரியல்களைப் போல், விஜய் டிவியின் மற்ற சீரியல்களும் போட்டி போட்டு வருகின்றன. விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேநேரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீரியல்களுடன் சேர்த்து முன்னனி ரியாலிட்டி ஷோக்களும் ஒளிப்பரப்பாகி வருகின்றன.
விஜய் டிவியில் ப்ரைம் டைம் ஆன, 7 மணிக்கு நாம் இருவர் நமக்கு இருவர், 7.30 மணிக்கு தமிழும் சரஸ்வதியும், 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ், 8.30 மணிக்கு பாக்கியலட்சுமி, 9 மணிக்கு பாரதி கண்ணம்மா, 9.30 மணிக்கு ராஜா ராணி, 10 மணிக்கு தேன்மொழி பிஏ ஆகிய சீரியல்கள் தமிழ் சீரியல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இந்த சீரியல்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளது. பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு துவங்கி 10.30 மணி வரை ஒளிபரப்பப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமலஹாசன் வரும் எலிமினேஷன் தொடர்பான எபிசோட்கள் மட்டும் 9 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும்.
ஆனால் இந்த சீசன் ஒளிபரப்பப்படும் நேரம் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீசன் இரவு 8 மணி அல்லது 8.30 மணிக்கு துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நேரம் மாற்றப்படலாம். இதனிடையே இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் விஜே ஜேக்குலின் நாயகியாக நடிக்கும் தேன்மொழி பிஏ சீரியல் செப்டம்பர் இறுதியுடன் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமலஹாசன் வரும் எலிமினேஷன் எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்பதால், முக்கிய சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்க பாதிக்கப்படாமல் இருக்க, டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்கள் இனி சனிக்கிழமை ஒளிப்பரப்பாகாது எனத் தெரிகிறது. அந்த சீரியல்கள் இனி திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிப்பரப்பாகும் என்று தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகரிக்க மற்ற ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமே இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சீரியல்களில் ஒளிப்பரப்பு நேரம் மாற்றபடும் என்ற தகவலால், சீரியல் ரசிகர்கள் தங்களின் விருப்பமான சீரியல்கள் ஒளிபரப்பாகும் புதிய நேரங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். பிக்பாஸ் சீசன் 5 விரைவில் துவங்க உள்ளநிலையில், ஒளிப்பரப்பு நேரம் உள்ளிட்ட தகவல்களுடன் விரைவில் புதிய ப்ரோமோ வெளியாக உள்ளது. ஏற்கனவே 3 ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே நிகழ்ச்சிக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil